கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற இரு புதிய முயற்சிகளை உலக மேடையில் புகழ்பெற்ற லிடியன் நாதஸ்வரம் துவங்கி வைத்தார். அறிமுக நிகழ்வை தொடர்ந்து லிடியன் நாதஸ்வரம் பள்ளி மாணவர்களுடன் உரையாடி, அவர்களின் கேள்விக்கு அற்புதமாக பதில் அளித்தார். பின்னர் மாணவர்கள் முன்னிலையில் பியானோ வாசித்து காண்பித்து அவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் லிடியனின் சகோதரி அமுர்த வர்ஷினி பாட்டு பாடி அசத்தினார்.
அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற சர்வதேச தரத்திலான புதிய முயற்சியை பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர் வடிவமைத்திருக்கிறார்.
இந்நிகழ்ச்சியில், புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்கள், ஓவியர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர், மேலும் நக்கீரன் கோபாலும் கலந்து கொண்டார்.
லிடியனின் தந்தையும் இசையமைப்பாளருமான வர்ஷன் சதீஷ் பேசும்போது, ‘நான் இங்கு இருப்பது மிகவும் மகிழ்ச்சி. எங்களை இங்கு அழைத்ததற்கு நி்ர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகுமார் மற்றும் ஸ்ரீதர் அவர்களுக்கு நன்றி. பள்ளி பருவம் என்பது ஒரு அரிய வாய்ப்பு, அனைவரும் கூறும்படி லிடியன் உலக புகழ், பெருமைகளையும் பாராட்டுக்களையும் பெற்றாலும் என் மகனிற்கு நான் ஒரு ரசிகன்.
லிடியன் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் பயிற்சி எடுக்கிறார். இந்த வயது மிகவும் அற்புதமான வயது. அதை டெக்னாலஜி எனும் செல்போன், யூடியூப், கேம்ஸ் ஆகியவற்றில் நேரத்தை செலவிடாமல் இருத்தல் நல்லது.”என்றார்.
ஏ.பி.ஸ்ரீதர் பேசும்போது, ‘என் வாழ்வில் ஒரு சர்வதேச அளவிலான ஓவியக்கல்லூரி ஒன்று கட்ட வேண்டும் என்பது ஆசை. அதன் தொடக்கமாக இப்பள்ளியில் டிப்ஸ் கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி தொடங்கியுள்ளேன். என்றார்.
இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகுமார் அவர்கள் இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக செய்திருந்தார்கள்.