வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள ‘கோமாளி’ திரைப்படத்தின் வெளியீட்டில் தற்போது சிக்கல் !
இந்தப் படத்தில் ஜெயம் ரவி நாயகனாகவும், காஜல் அகர்வால், சம்யுக்த ஹெக்டே நாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகி பாபு, ஆர்.ஜே.ஆனந்தி, பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் ஜெயம் ரவி 9 வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுகிறாராம். 1990-களின் பின்னணியில் இருக்கும் அவரின் தோற்றமே ஒரு சுவாரஸ்யமாக இருக்குமாம்.
ஜெயம் ரவியின் சமீபத்திய ஹிட் படமான ‘டிக் டிக் டிக்’ படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு போலவே இந்தப் படத்திற்கும் மிக அதிகமான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்திலும், விநியோகஸ்தர்களிடத்திலும், தியேட்டர் உரிமையாளர்களிடத்திலும் இருந்து வருகிறது.
இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வருவதாக சென்ற மாதமே அறிவிக்கப்பட்டு அதற்கான விளம்பர வேலைகளும், வெளியீட்டு வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நேரத்தில் இந்தப் படத்தை வெளியிட விடாமல் தடுக்கும் முயற்சியில் திருச்சி விநியோகஸ்தர் ஒருவர் இறங்கியிருப்பதாகவும், அவருடைய தூண்டுதலில் திருச்சி பகுதி விநியோகஸ்தர்கள் சங்கம் ‘கோமாளி’ படத்திற்கு ரெட் போடும் அபாயம் இருப்பதாகவும், அப்படி இந்தப் படத்திற்கு ரெட் போடப்பட்டால் தயாரிப்பாளர் கவுன்சில் இதனை எதிர்த்து கடும் நடவடிக்கை எடுக்கும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலின் இடைக்கால கமிட்டியின் உறுப்பினரும், தயாரிப்பாளருமான ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்அறிவித்திருக்கிறார்.
பிரச்சினை என்னவென்று விசாரித்தபோது தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் ஒரு வித்தியாசமான வில்லங்க கதை தெரிய வருகிறது.
சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் வெளியானது ‘மிஸ்டர் லோக்கல்’ என்கிற திரைப்படம். இந்தப் படத்தை தயாரித்திருந்தவர் ஞானவேல்ராஜா.
இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை அவுட் ரேட் அடிப்படையில் ஈரோட்டை சேர்ந்த ஒரு பிரபல விநியோகஸ்தர் வாங்கியிருந்தார். அவரிடமிருந்து திருச்சி பகுதி விநியோக உரிமையை பிரபல விநியோகஸ்தரான ஜி.தியாகராஜன் மினிமம் கியாரண்டி அடிப்படையில் வாங்கியிருக்கிறார்.
இவர் இந்த உரிமையை வாங்குவதற்கு சக்தி பிலிம் பேக்டரியின் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான சக்திவேலன் உதவிகள் செய்திருக்கிறார்மிஸ்டர் லோக்கலை பொருத்தவரை ஹெல்ப் மட்டுமே பண்ணியிருந்தார். இந்த சக்திவேலன்தான் இப்போது ‘கோமாளி’ படத்தை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்ய வாங்கியிருக்கிறார்.
தியாகராஜன் திருச்சி பகுதி தியேட்டர்களுக்கு அட்வான்ஸ் தொகையின் அடிப்படையில் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தை விநியோகம் செய்திருக்கிறார். ஆனால், ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படம், சரியாக ஓடாமல் நஷ்டமடைந்தது.
இந்த நஷ்டத்தினால் பாதிப்படைந்த அட்வான்ஸ் கொடுத்த தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர் தியாகராஜனிடம் இதற்காக நஷ்டஈடு கேட்டிருக்கிறார்கள். தியாகராஜன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் கேட்டிருக்கிறார். ஞானவேல்ராஜாவோ “இதனை நான் உங்களுக்கு விற்கவில்லை என்பதால், நான் இதற்கு பொறுப்பேற்க முடியாது…” என்று சொல்லியிருக்கிறார்.அதானே உண்மை!
இதையடுத்து ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் திருச்சி ஏரியா உரிமையை வாங்குவதற்கு உதவிகள் செய்த ‘சக்தி பிலிம் பேக்டரி’ சக்திவேலனிடம் கேட்டிருக்கிறார் தியாகராஜன். அவரும் “இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை…” என்று சொன்னதால் கோபப்பட்ட தியாகராஜன், தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிற திருச்சி பகுதி விநியோகஸ்தர்களை வைத்துக் கொண்டு “மிஸ்டர் லோக்கல்’ படத்தின் நஷ்டத்திற்கு ஈடு கட்டும்வரையில், ‘சக்தி பிலிம் பேக்டரி’ வெளியிடும் ‘கோமாளி’ படத்தை வெளியிடவிட மாட்டேன்…” என்று சொல்லி வருகிறார்.இது எந்த ஊர் நியாயம் என்பது தெரியவில்லை.
இதையொட்டி அந்தப் பகுதி விநியோகஸ்தர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இவற்றுடன் பேசி ‘கோமாளி’ படத்திற்கு ரெட் கார்டு போடவும் முயற்சிகள் நடக்கிறது.
இந்தப் பிரச்சினை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு வந்ததும், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் ‘கோமாளி’ படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் சார்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசியிருக்கிறார். ஆனால் விநியோகஸ்தர் தியாகராஜனோ தனக்கு நஷ்ட ஈடு கொடுத்தால்தான் ‘கோமாளி’ படம் ரிலீஸாகும் என்று முரண்டு பிடிக்கிறாராம்.
இது தொடர்பாக தன்னுடைய கருத்தை ஒரு ஆடியோவில் பேசி வெளியிட்டிருக்கும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், “திருச்சி பகுதி விநியோகஸ்தர் சங்கம் ‘கோமாளி’ படத்திற்கு தடை விதித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு திரையரங்கம், திருட்டு டிவிடி தயாரித்த வழக்கில் சிக்கியிருக்கிறது. அந்த வழக்கையும் நாங்கள் இப்போது கையில் எடுக்க வேண்டி வரும்..” என்று எச்சரித்திருக்கிறார்.
அதிலும் எம்.ஜி. அடிப்படையில் எந்தப் படத்தை வாங்கினாலும் அதன் நஷ்டமோ, லாபமோ அது அப்படியே, முழுவதுமாக விநியோகஸ்தரையே சேரும். லாபம் அடைந்தால் விநியோகஸ்தர் அதிலிருந்து ஒரு பைசாகூட தயாரிப்பாளருக்குத் தர வேண்டியதில்லை. அதேபோல் நஷ்டமடைந்தால் விநியோகஸ்தர் அதற்கான நஷ்ட ஈட்டை தயாரிப்பாளரிடத்திலோ அல்லது வேறு யாரிடத்திலும் கேட்கவே முடியாது. இது சினிமாவில் வியாபார நடைமுறையில் இருக்கும் ஒரு விஷயம். இது சட்டப்படியானது. இதையெல்லாம் தெரிந்திருந்தும் அராஜகமாக விநியோகஸ்தர் தியாகராஜன் ரிலீஸ் சமயத்தில் அடாவடி செய்தாவது ஏதாவது ஒரு தொகையை பெற்றுவிடலாம் என்று நினைத்து நாடகமாடுவதாக தயாரிப்பாளர் தரப்பினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இத்தனைக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தை வாங்கி விநியோகம் செய்த அந்த ஈரோட்டு விநியோகஸ்தர்தான், இப்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘லயன் கிங்’, ‘நேர் கொண்ட பார்வை’ ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறாராம்.
“அவரிடம் நஷ்ட ஈடு கேட்காமல், வாங்க உதவிய வேறொருவரிடம் கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது..?” என்கிறார்கள் தயாரிப்பாளர் சங்கத்தினர்..!