செய்திகளில் அடிக்கடி தலைப்புச் செய்திகளாக வருவதற்கு பல உத்திகள் உண்டு.
செல்வாக்கு,சொல்வாக்கு இல்லாதவர்களாக இருந்தாலும் ஆள்கிற கட்சிக்கு ஆதரவாக இருந்தால் போதும் பத்திரிக்கை, இதர ஊடகங்களில் ஊடுருவி விடலாம்.
அது எஸ்.வி.சேகருக்கு உண்டு.
ராசு முருகன் வளர்ந்து வருகிற சமூகப்போராளி.!
எழுத்து அவரது ஆயுதம். அதனது களம் பத்திரிகைகளும் ,திரைத்துறையும்.!
ஜோக்கர் படத்தின் வழியாக அரசியல்வாதிகளின் .சமூகப்போராளிகளின் கவனத்தைக் கவர்ந்தார், உளி கொண்டு தகர்க்க முடியாத உருக்கு மனிதன்.
அவரது படைப்பு ஜிப்சி! நாடோடிகளாக இடம் பெயர்ந்து வாழ்கிறவர்களின் இன்னலை எடுத்துரைக்கிற கதையாக இருக்கலாம்.
அந்த படத்துக்குத்தான் நெருக்கடி வந்திருக்கிறது. இதை சொல்லிஇருப்பவர்எஸ்.வி.சேகர்.
தணிக்கையாளர்கள் பார்வையில் ஜிப்சி பாஸ்பரசாக தெரிந்திருக்கிறது. மஞ்சளை அரைத்து விழுதாக வைத்திருந்தாலும் அவர்களுக்கு அது’யெல்லோ பாஸ்பரஸ் ” தான்.என்பதை அவருக்கே உரிய பாணியில் சொல்லி இருக்கிறார் சேகர்.
அந்தப் படம் ரிவைசிங் கமிட்டி வரை சென்று விட்டதாகவும் அதில் யோகி ஆதித்யநாத்தைப் போல ஒருவர் வருவதாகவும் ஆர்.எஸ்.எஸ்.கருத்துகளை கண்டித்து வசனங்கள் எழுதப்பட்டிருப்பதாகவும் அதனால் படம் வருமா என்பது சந்தேகம் என்கிற கருத்தினை பதிவு செய்திருக்கிறார் .
அவரது நாடகங்களை விட்டுத் தள்ளுங்கள். பார்வையாளர்கள் கம்மி. ஆனால் சோ ராமசாமியின் நாடகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
அவைகளில் இல்லாத விமர்சனங்களா?
துக்ளக் படத்தில் இந்திரா அம்மையாரை உருவகப்படுத்தி ஒரு நடிகை நடித்திருந்தாரே நினைவில்லையா சேகருக்கு? தற்கால பல படங்களிலும் பல போலிகளை தோலுரித்துக் காட்டிய கேரக்டர்களை தணிக்கை அனுமதிக்கவில்லையா?
நாட்டு நலனுக்கு எதிராக செயல்படுகிற கும்பலுக்கு தணிக்கை அடிமையாகி விடக்கூடாது. தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி போன்ற ஒரு அரசியல் தலைமை இல்லாததன் விளைவு இப்போதுதான் தெரிகிறது.
இந்திராகாந்தியை விட தியாகத்திலும் நிர்வாகத்திலும் சகிப்புத்தன்மையிலும் அவர் கூறுகிற யோகி எந்த வகையில் உயர்வானவர்?
“அத்தனை பெரும் டிராபிக் கான்ஸ்டபிள்கள்’ என எம்.பி.க்களை சுட்டிக்காட்டி விமர்சித்தாரே மறந்து விட்டார்களா அரசியல்வாதிகள்.?
ஜனநாயகத்தில் தர்க்க ரீதியாக யாரையும் விமர்சிக்க உரிமை உண்டு!
இந்தியா ஜனநாயக நாடு.பலவித கலாசாரங்களை பின்பற்றுகிற வித்தியாசமாக வாழ்கிற மக்கள் நிறைந்த நாடு!
“ராஜு முருகன் சொன்னதைப் போல “ஒரு குரலை அடக்க நினைத்தால் ஓராயிரம் குரல் எழும்” “ஒரு அப்பாவியின் உயிரைப் பறித்தால் திருப்பி அடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?” என்கிற நிலை வராதா?
நெருக்கடி கால நிலையை உருவாக்காதீர்கள்.!
–தேவிமணி