“சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாரதி பாடியது பாப்பாக்களுக்கு மட்டும்தான் எங்களுக்கு இல்லை என சில மத வெறியர்கள் சினம் கொண்டு திரிகிறார்கள்.
தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களுக்கு அரசு ஆதரவாக இல்லை,சட்டமும் அவர்களுக்கு சாதகமாக இருக்கவில்லை என்பதற்கு இரு உதாரணங்கள்.
ஒன்று ஆந்திராவில்!
மற்றொன்று தமிழ்நாட்டில்!
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர ரெட்டியின் நினைவு நாளை ஆந்திரம் முழுக்க அனுசரித்தனர்.
அனந்தவரம் கிராமத்துக்கு சட்ட மன்ற உறுப்பினர் ஸ்ரீ தேவி சென்றிருக்கிறார். சாதி மதம் பார்க்காமல் சிகிச்சை அளித்து வருகிற டாக்டர். . இவரை தங்களது கணேசர் சதுர்த்தி பந்தலுக்கு வரும்படி கிராமத்து மக்கள் கேட்டுக்கொள்ள அவரும் சென்று கணேசரை வழிபட்டிருக்கிறார்,
திடீரென வசவுகள்,ஆபாச பாடல்கள்.
கொம்மினேனி சிவய்யா என்பவர் “அந்த தாழ்த்தப்பட்ட சாதிக்காரி எம்.எல்.ஏ,வை எப்படி சாமி கும்பிட அனுமதிக்கலாம். இந்த இடம் கேட்டுப் போச்சு.தீட்டுப்பட்டு போச்சு” என்று கத்தி கலாட்டா செய்திருக்கிறார்.
இவர் தெலுங்கு தேச கட்சி பிரமுகர் என்கிறார்கள்.
இனி அப்படியே மதுரைப் பக்கமா வாங்க.
பேரையூர் .சுப்புலாபுரம்.
சண்முகவேல் என்பவர் இறந்துபோனார். ஆதி திராவிடர். இவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்துக்கு எரியூட்டுவதற்காக கொண்டு சென்றிருக்கிறார்கள்.
வழியில் கனமழை.
நனைந்து கொண்டே சென்றார்கள். எரியூட்டுவதற்கு இவர்களது இடத்தில் கொட்டகை எதுவும் இல்லை.
இந்துக்கள் பிணங்களுக்கு மட்டுமே தகரக் கொட்டகை.
மழை நின்றபாடில்லை. பிணம் மழையில் நனைந்து ஊறுகிறது.
தகரக் கொட்டகை இருக்கிற இடத்தில் எரித்துக் கொள்ள அனுமதி கேட்கிறார்கள். அரசு அதிகாரிகளும் ஆதிக்க சாதியினரும் அனுமதி மறுக்கிறார்கள்.
இதுதான் தமிழ்நாட்டில் தலித்துகளுக்காக அரசு செய்யும் உதவி.
அவர்களுக்கும் ஒரு தகரக் கொட்டகை போட்டுக் கொடுத்தால் கஜானா காலியாகிவிடுமா?