தென்னிந்திய நடிகர் சங்க மைதானத்தில் இன்று காலை ரூ. 25 லட்சம் செலவில் 3250 நடிகர் மற்றும் நடிகைகளுக்கு தீபாவளி சிறப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.வேஷ்டிகள் ,சட்டைகளும், சேலைகள் மற்றும் நடிகர் சங்க அலுவலக நிர்வாகிகளின் சார்பிலான இனிப்பு பெட்டிகளும் அடங்கும். தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தலைமையில் தீபாவளி சிறப்பு பரிசான வேஷ்டி,சட்டை,சேலை மற்றும் இனிப்பு ஆகியவைகளை சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களான 2000 நபர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் 400 பேர் வாக்குரிமை இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மற்ற மாவட்டங்களில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிர்வாகிகள் சென்று தீபாவளி பரிசு பொருட்களை வழங்கவுள்ளனர். அந்த வகையில் கோவையில் நடிகை கோவை சரளா,நடிகர் ரமணா. சேலத்தில் விக்னேஷ், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நடிகர் பசுபதி, தர்மபுரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் செயற்குழு உறுப்பினர் நடிகர் தண்டபானி, மன்னார்குடி, திருவாரூர், தஞ்சாவூரில் காமராஜ். மதுரையில் நடிகர் கருணாஸ், திருச்சியில் நியமன செயற்குழு உறுப்பினர் ஜெரால்ட் ஆகிய நிர்வாகிகள் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி சிறப்பு பரிசு பொருட்களை வழங்கவுள்ளனர் .
விழாவில் தலைவர் நாசர் பேசியது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மிக்க மகிழ்ச்சியான, உணர்வுப்பூர்வமான, சந்தோசமான தீபாவளி வாழ்த்துகள். எங்க எல்லாருக்கும் இது தல தீபாவளி, புதுசா நாங்க வந்து தென்னிந்திய நடிகர் சங்கத்துல பொறுப்பேற்று இருக்கிறோம் அதனால் எங்கள் எல்லோருக்கும் இது தல தீபாவளி , தல தீபாவளிக்கான உற்சாகத்துடன் நாங்கள் இங்கே இருக்கிறோம். ஏனென்றால் ஆரம்பிக்கும் போதே புத்தாடை, இனிப்பு பகிர்வுகளுடன் ஆரம்பம் ஆகிறது என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இதை போன்ற மகிழ்ச்சி என்றுமே இருக்கும். இந்த மூன்றாண்டு மட்டும் கிடையாது என்றுமே இதே மகிழ்ச்சி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நிறைந்து இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. சட்டரீதியாக சிலருக்கு வாக்குரிமை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கிடையாது. இது ஆரம்ப காலம் முதல் உள்ளது, இவை நடிகர்களின் நிலையை பொறுத்து பிரிக்கப்பட்டுள்ளது. இதை நிர்வாகம் கூடி அதற்க்கான முடிவுகளை தீவிரமாக எடுக்கும் , இவ்வாறு தலைவர் நாசர் கூறினார்.
நடிகர் கார்த்தி, பொன்வண்ணன் பேசிய போது , அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும் தான் வாக்களிப்பதற்கும் மற்றும் நலத்திட்ட உதவி பெறுவதற்க்கும் சட்டத்தில் இடம் உள்ளது. மற்றவர்கள் அனைவருக்கும் தொழில் செய்வதற்க்கான உரிமை உள்ளது என்று சட்டத்தில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த நல திட்டம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உள்ள 3250 நபர்களின் முழு விபரங்களை சேகரித்து அவர்களின் வருமானம் மற்றும் அவர்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து மருத்துவ தேவை, நிதி உதவி அல்லது கல்வி உதவி போன்றவைகளில் எது என்பதை உணர்ந்து அதை பூர்த்தி செய்வதே முதல் பணியாகும் என்று நாசர் தெரிவித்தார். தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் சிலருக்கு சரியான முகவரி இல்லாதகாரனத்தால் பரிசு பொருள் அனுப்புவது சிரமமாக உள்ளது அவர்களில் யாரும் இந்த நிகழ்வை காண நேர்ந்தால் எங்களுக்கு உடனே தெரியபடுத்தவும் என்று கார்த்தி தெரிவித்தார் .தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களில் ஓய்வூதியம் வாங்குபவர்களின் எண்ணிக்கை முன்பை விட இரண்டு மடங்கு ஆகும். நேற்று நடந்த இரண்டாவது செயற்குழு கூட்டத்தில் ஐசரி கணேஷ் அவர்கள் ஒரு 140 நபர்களையும், ஜேப்பியார் மற்றும் சங்கத்தில் இருந்து ஒரு 120 நபர்களின் பெயர்களை கொடுத்தனர் மொத்தம் சுமார் 300 நபர்கள் சேர்த்து ஏற்கனவே இருப்பவர்களையும் சேர்த்து சுமார் 600 நபர்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று பொருளாளர் கார்த்தி தெரிவித்தார்.பரிசு பொருட்களை பெற்ற தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் முதல்முறையாக எங்கள் தாய் வீட்டு சீதனம் வாங்கியது போல் உள்ளது என்று நிர்வாகிகளை வாழ்த்தி சென்றனர்.