ஆளும் கட்சியினரைப் பகைத்துக் கொண்டதின் விளைவா?
கோஷ்டிச்சண்டை காரணமா ?
அல்லது போட்டிப் பிரிவினரை ஆளும் கட்சியினர் அணைத்துக் கொண்டதின் விளைவா?
எதோ ஒரு ஏழரை நடிகர் சங்கத்திற்குள் பிரவேசித்ததன் விளைவு சங்கத்தின் முக்கியப்பணிகள் முடக்கப்பட்டு இருக்கின்றன .
ஒழுங்காக, முறையாக ,பயணித்துக் கொண்டிருந்த சங்க வேலைகள் சிலரது சுயநலத்துக்கு பலியானதால் பணபலம் மேலோங்கி விட்டது கண்கூடு..
பணத்தைக் கொண்டு அனைத்தையும் சாதிக்கலாம் என்கிற மனப்பான்மை உள்ளவர்களின் ஆதிக்கத்துக்கு அடிமையாகும் சூழல் உருவாகியது.
நீதிக்கே விலை பேசினார்கள்.!
இன்று சங்கத்தின் நிலை என்ன?
புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
அரசுப் பதிவாளரின் வழக்கு ஒரு தடை.நடிகர்சங்கத்தின்வழக்கு.
அஞ்சல் வழி வாக்கு சீட்டுகள் வந்து சேரவில்லை என ஒரு குற்றச்சாட்டு..
ஆக இந்த மொத்த முறையீடுகளையும் தனித்தனி நீதியரசர் விசாரித்தால் தீர்ப்புகள் முரண்படலாம் என்பதால் ஒரே நீதி அரசரை வைத்து நடிகர் சங்க பிரச்னைகளை ஆய்வு செய்து அல்லது விசாரணை செய்து தீர்ப்பு வழங்கக் கோரி உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
ஆனால் உயர்நீதிமன்ற தலைமை நீதி அரசர் பதவி விலகி விட்டதால் அங்கே ஒரு பிரச்னை ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த அம்மையாரின் பதவி விலகல் பிரச்னை எப்போது தீருமோ?தெரியாது.
இதனால் ஒரே நீதியரசரின் விசாரணை என்பது எப்போது சாத்தியமாகும் என்பது புதிதாக வரக்கூடிய தலைமை நீதியரசர் கையில் இருக்கிறது.
காத்திருக்க வேண்டிய கட்டாயம்.
கோர்ட்டில் இருப்பது பாண்டவர் அணிக்கும் சங்கரதாஸ் சுவாமிகள் அணிக்குமான வழக்கு அல்ல.
பதிவாளருக்கும் நடிகர் சங்கத்துக்கும் இடையேயான வழக்கு. இவர்கள் கோர்ட்டுக்கு வெளியில் சமாதானமாகப் போய்விடலாம் என்கிற முடிவுக்கு வந்தாலும் அதில் பயனில்லை.
கோர்ட்டு என்ன சொல்கிறதோ அதுதான் செல்லும்!
நடிகர் சங்கத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் வாக்குகளை எண்ணி யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் வசம் சங்கம் போய் விடும்.
பதிவாளருக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் தனி அதிகாரியை நியமித்து விடுவார்கள்.
இவை போக நீக்கப்பட்டவர்களை சேர்ப்பதா வேண்டாமா என்கிற பிரச்னையும் இருக்கிறது.
ஆக இதெல்லாம் முடிந்து ஒரு முடிவுக்கு வர ஆறு மாத காலம் ஆகலாம் என்கிறார்கள் சட்டம் தெரிந்தவர்கள்.
ஓட்டுப் பெட்டியில் இருக்கிற ஓட்டு சீட்டுகளில் மை அழிந்து விட்டது,ஆகவே மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று யாராவது வழக்குப் போட முடியுமா என்பது தெரியவில்லை!
—தேவிமணி