தமிழ் நடிகைகளில் பன்முகத் திறமையுள்ள நடிகைகளில் ராதிகாவும் ஒருவர்.
நடிகவேள் எம்.ஆர் ராதாவின் மகள்.
ஆக நடிப்பாற்றல் என்பது இயல்பாகவே ரத்தத்தில் கலந்து இருக்கிறது.. திரைப்படங்களில் முக்கிய பாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடித்துக் கொண்டிருப்பவர். இன்றைய நடிகைகளில் இவருக்கு இணையான நடிப்பாற்றல் மிகுந்தவர் எவரும் இல்லை.
சிறந்த நடிகை என்கிற பட்டம் பெறுவதால் யாருமே சிறந்த நடிகை ஆகி விடமுடியாது. இன்று அப்படித்தான் ஆகி விட்டது பட்டங்களின் தன்மை.! யார் யாருக்கோ என்னென்னவோ பட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப் தனக்கே நோபல் பரிசு வழங்கி இருக்க வேண்டும் என்று சொல்வதைப்போல கேட்டுப் பெறுவதும் அல்ல பட்டம்.!
அண்மையில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்வில் ராதிகாவுக்கு ஒரு பட்டம் கொடுப்பதாக அறிவித்து இயக்குனர் சரண் சார்பில் வழங்கப்பட்டிருக்கிறது.
பட்டத்தின் பெயர் ‘நடிகவேள் செல்வி’. நன்றாக திரும்ப ஒருமுறை படியுங்கள்
அதன் பொருள் என்ன?
“எம்.ஆர்.ராதாவின் மகள்’-இப்படித்தானே அதன் சிறப்பு இருக்கிறது.!
உலகம் அறிந்த உண்மை அவர் நடிகவேளின் மகள் என்பது. அந்த உண்மையை நீங்கள் புளி போட்டு துலக்குவதற்கு பெயர் பட்டமா?
பட்டம் என்றால் கலைஞர் கருணாநிதி கொடுத்த ‘கலையரசி ‘என்பதுதான் பட்டம். அதுதான் விருது!
இசைஞானி என்றார் இளையராஜாவுக்கு!
கலைஞானி என்றார் கமல்ஹாசனுக்கு.! இரண்டும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
கலைஞர் கொடுத்த பட்டம் என்பதால் கசந்து விட்டது என்று சொல்வார்களேயானால் நடிப்பு அரசி என்றோ, பன்முக அரசி என்றோ ,மக்கள் செல்வி என்றோ அல்லது வேறு வகையில் சிந்தித்து மற்றொரு பெயரை தேர்வு செய்து வழங்கி இருக்கலாம். எம்.ஆர்.ராதாவின் மகளை நடிகவேள் செல்வி என மாற்றம் செய்து அளிப்பதில்— அழைப்பதில் என்ன பெருமை இருக்கிறது?
தங்கத்தை தங்கம் என்று சொல்வதில் என்ன பெருமை ?
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அளித்த விருதினை விலக்கி நிற்பது அரசியல் !
நடிகவேள் செல்வி என்பது விருது அல்ல.அது ஓர் அடையாளம்.
—தேவிமணி.