திரு .சரத்குமார் அவர்கள்,
தலைவர் ,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர்,
அன்புள்ள புரட்சித் திலகம் அவர்களுக்கு,
ஒரு பத்திரிகையாளனின் பகிரங்கக் கடிதம்.
அண்மையில் பெருந்தலைவருக்கு விருதுநகரில் மணிமண்டபம் கட்டி திறந்து வைத்தீர்கள்.பெருமையாக இருந்தது.
ஆனால் மகிழ்ச்சியாக இல்லை.
தலைவர் காமராஜரின் கனவு என்றுமே இத்தகைய மண்டபங்களைப் பற்றியதாக இருந்ததில்லை.
அவரின் நோக்கமெல்லாம் ,ஏன் உயிர் மூச்சே ஏழைகளின் அறிவுக்கண்களைத் திறப்பதற்கு கல்விக் கூடங்களை அமைப்பதுதான்.! அரசின் உதவியுடன் நீங்கள் பெரிய அளவில் பாலிடெக்னிக்,அல்லது மேல்நிலைப்பள்ளி அமைத்திருக்கலாம். சுற்று வட்டார ஏழைகளுக்கு பெரிதும் உதவியாக இருந்திருக்கும்.
சென்னையில் அமைந்திருக்கிற தலைவர்களின் மணி மண்டபங்களுக்கு ஒரு மாலை வேளையில் மாறு வேடத்தில் சென்று பாருங்கள். மனம் உடைந்து போவீர்கள். காதலர்களின் சந்திப்பு மையமாக அந்த மணி மண்டபங்கள் மாறிக் கிடக்கும் அவலம் …எங்கே போய் சொல்வது?
மூதறிஞர் ராஜாஜி,பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பொன்மொழிகள் எந்தளவுக்கு சேதாரம் அடைந்திருக்கிறது என்பது புரியும்!
ஆக அரசின் கடமை கட்டியதோடு சரி. அதை கண்காணிக்கும் கவலை அரசுக்கும் இல்லை காவல் துறைக்கும் இல்லை.
இப்படி சொல்வதால் விருதுநகர் மணி மண்டபத்துக்கும் இதே கதிதான் நேரும் என சொல்ல நான் வரவில்லை. அதுவே கல்விக்கூடமாக இருந்தால் வழி வழியாக கல்வி கற்கும் மாணவர்கள் அதிகரிப்பார்களே ,உங்களின் பெயரும் நிலைத்து நீடித்து இருக்குமே.அதைத்தான் நினைவுப்படுத்தினேன்.
சரி நடந்து முடிந்த காரியத்தை ஆய்வுசெய்வது சரியாகாது. ஆனால் காமராஜர் சிலையை சுத்தம் செய்யும் கடமையை மக்களே செய்ய வேண்டும்,அரசினை எதிர்பார்க்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறீர்களே அதைதான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
கடற்கரைச்சாலையில் இருக்கிற சிலைகளை பரமாரிக்கிற பணி அரசுக்கே இருக்கிறது.அதற்கான தொகையும் ஒதுக்கப்படுகிறது. அந்த பணம் எங்கே போகிறது?யார் பொறுப்பு?
கடற்கரையில் சிலைகளை திறந்து வைப்பது மட்டும்தான் அரசுப்பணி. பராமரிப்பு வேலையெல்லாம் மக்களே செய்வார்கள் என்றால் அதில் சமூகவிரோதிகள் ஊடுருவும் வாய்ப்பு இருக்கிறதே?
சிலைகளை சிதைப்பதும் செருப்பு மாலைகள் போடுவதும் வீரப்பதக்கம் பெறுவதற்கு சமம் என சில அமைப்புகள் தலை எடுத்திருக்கிற காலகட்டத்தில் நீங்கள் சொல்லியிருக்கிற ஆலோசனை பிழையாகப்படுகிறது.
உங்கள் விளக்கத்துக்காக காத்திருக்கிறேன்,
அன்புடன் ,
தேவிமணி