கதை : பூமணி எழுதிய வெக்கை நாவல். வசனம் :வெற்றி மாறன் ,ஒளிப்பதிவு : வேல்ராஜ், இசை : ஜி.வி.பிரகாஷ்குமார், திரைக்கதை இயக்கம் : வெற்றி மாறன்
தனுஷ், மஞ்சு வாரியர்,பசுபதி, கென் கருணாஸ் ,பாலாஜி சக்திவேல் ,ஆடுகளம் நரேன்,
தயாரிப்பாளர் : கலைப்புலி தாணு.
*****************
சாதி அடையாளம் வந்து விடுமோ என்கிற அச்சத்தில் கத்தி மீது நடந்திருக்கிறது மொத்த யூனிட்டும்.
நம்நாடு இதழ்,கருப்புச்சட்டை, ,பஞ்சமி நிலம் ,இயக்கம் போன்ற அடையாளங்கள் கதையின் களத்தை,காலத்தை சொல்லிவிடுகிறது. ஒரு சமூகத்தின் வலியை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் வெற்றி மாறன். செருப்புப் போட்டுக் கொண்டு பள்ளிக்கூடம் சென்ற அந்த மாணவியை அடித்து உதைத்து தலை மீது சுமக்கச் சொல்லி…..இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை. இப்படி எத்தைனையோ உண்மைகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
தனுசின் கேரக்டர் அவருக்கு ஒரு புதிய பரிணாமம் .கல்யாணத்துக்கு தயார் நிலையில் ஒரு மகன்,எல்லாம் புரிந்த இன்னொரு மகன், ஆசைக்கு ஒரு மகள். இவ்வளவு பெரிய குடும்பஸ்தனுக்கே உரிய தளர்வு. அவ்வப்போது ஆவேசம் தலை எடுத்தாலும் அடங்க வேண்டிய காலத்தின் கட்டாயம். அருவிக்குள் மின்சாரமாக ஒளிந்து கிடந்த ஆற்றல் இந்தப் படத்தில் ஒளிர்கிறது. தனுஷுக்குள் எத்தனை திலகங்கள் அய்யா! சடையப்பர் கலைப்புலியாருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே அய்யா!
தளர்ந்து போன உடம்பின் தொய்வை அந்த நடை அளந்து காட்டுகிறதே.! மன்னிப்புக் கேட்டு ஒவ்வொருவர் காலிலும் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து மன்னிப்புக் கேட்கிற போது தியேட்டரே விசும்புதே !வில்லன் கோஷ்டி இலவசமாக திட்டு வாங்குவது இந்த காட்சியிலும்தான்! கொள்ளி போடக்கூடியவன் தலையற்ற முண்டமாக எரியூட்டப்பட்டான் , இருக்கிற இன்னொரு மகனைக் காப்பாற்றியாக வேண்டுமே என்கிற ஒரு தந்தையின் தவிப்பு….தனுஷ்தானா அது? சண்டைக் காட்சிகளில் தெரிந்து விடுகிறது.
விருதுகள் உனக்கில்லை என்றால் அவைகளுக்குத் தகுதியில்லை என அர்த்தமாகிவிடும்.அதிலும் அரசியல் என்பது உண்மையாகி விடும்.
தனுஷ் கிரேட் ஆர்ட்டிஸ்ட் !
முற்பாதியில் சமூகத்தின் பாதிப்பினால் குடும்பத்தை மறந்து தலைமறைவாக ஓடுகிற தனுஷை பிராஸ்தடிக் ஒப்பனை இல்லாமல் யதார்த்தமாக பார்க்க முடிந்தது. பிற்பாதியில் அந்த காலத்து சந்திரலேகா ரஞ்சன் மீசையுடன் இளமைத் துடிப்புடன் திரிகிற தனுஷை காட்டியிருக்கிறார்கள். படத்தைத் தாங்கி நிற்பதே தனுஷ்,மஞ்சு வாரியர்,கென் .பசுபதி இந்த நால்வரும்தான்.இவர்கள் இல்லையேல் அசுரன் பலவீனன்.
இதுவரை நடித்த படங்களில் இத்தனை இயல்பான காஸ்ட்யூம்களில் தனுஷை பார்த்ததில்லை.
கருணாசின் மகன் கென் .இந்தப்படத்தின் வழியாக தொழில் முறை நடிகனாக உயர்ந்து விட்டான்.அப்பனில் பாதியாவது பிள்ளை இருப்பான் என்பார்கள். அப்பன் தனுஷின் குணத்தில் விஞ்சி இருக்கிறான் கென்.
மஞ்சு வாரியர் அருமையான தேர்வு. பொதுவாக இந்த கதைக்கான நடிகர் தேர்வு திசைகள் திறந்து நடந்திருக்கிறது. பசுபதி என்றால் எதை எதிர்பார்ப்பார்களோ அதற்கு நேர்மாறான பாசமுள்ள பசுவை காட்டி இருக்கிறார்கள். பாசமுள்ள காதலி, மனைவியாக மஞ்சு வாரியர் நிறைவு செய்து இருக்கிறார்.
கேமராவினால் மிரள வைத்தவர் சில காட்சிகளில் பஞ்சாயத்து பண்ணியும் இருக்கிறார். ஒளிப்பதிவாளருக்கு வில்லனுக்கு உரிய தோற்றம். வேல்ராஜ் நடிக்கவும் வரலாம்.
பிரகாஷ்ராஜ் முற்போக்கு பொதுவுடமை வழக்குரைஞர்.சிறப்பு.மிகச்சிறப்பு.!
வசனங்கள் கந்தகக் கிடங்கு.பற்ற வைத்தால் வெடிக்கும். பற்ற வைக்கா விட்டாலும் தோற்றமே அச்சுறுத்தும்.வட்டார வழக்கு காதுகளுக்கு இனிமை.
சிறைக்கு செல்வதற்கு முன் தனுஷ் தன்னுடைய மகன் கென்னுக்கு சொல்லும் வார்த்தைகள் பொன் மொழி வரிசையில் பிரேம் பண்ணி மாட்டப்பட வேண்டியவை.
“”நம்ம கிட்ட இருக்கிற சொத்த பறிச்சிக்கலாம்,நெலத்த அபகரிச்சிக்கலாம்,ஆனால் படிப்பை யாராலும் பறிக்க முடியாது. நீ நல்லா படிச்சு பெரிய ஆளா ஆயிடு .ஆனா அவங்க செஞ்ச தப்ப நீ செய்யாதே!”
ஆமா உருண்டையை பைக்குள்ள வச்சுக்கிட்டு கிளம்பிடக்கூடாதே! அதென்ன உருண்டை ? படத்தைப் பாருங்க புரியும்.இல்லியா கென்?
படம் எப்படி ?
சினிமா முரசத்தின் மார்க் 4 / 5