இந்தியாவில் தொடர்ந்து நடைபெறுகிற கூட்டு வன்முறை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி,அனுராக் காஷ்யப், கொங்கனா சென், அபர்ணா சென், ராமச்சந்திர குஹா,ஷியாம் பெனேகல்,சௌமித்ரா சாட்டர்ஜி உள்ளிட்ட 49 இந்திய பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினர்.
அதில்,அரசை விமர்சிப்பதால் மட்டும் ஒருவர் தேசதுரோகி, அர்பன் நக்சல் என முத்திரைக் குத்தப்படுவதை ஏற்க முடியாது. நாட்டின் ஒரு குடிமகன் கூட உயிர் பயத்தில் தனது சொந்த நாட்டிலேயே வாழும் நிலை கூடாது.
இஸ்லாமிய மக்கள், சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.`எதிர்ப்புக் குரல் இல்லாமல் ஜனநாயகம் செயல்பட முடியாது, என்றும் அந்தக் கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது
”இக்கடிதம் இந்தியா முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.இந்த நிலையில், பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர், பிரதமருக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள், நாட்டினுடைய நற்பெயரை கெடுப்பதாகவும்,
சிறப்பாக செயல்படும் பிரதமர் நரேந்திர மோடியின் பணிகளை குறைத்து மதிப்பிடுவதாகவும், பிரிவினை வாதத்தை ஊக்குவிப்பதாகவும் கூறி, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இதையடுத்து , இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்டு விசாரித்த நீதிபதி சூர்யகாந்த் திவாரி, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார் .
நீதிபதியின் உத்தரவையடுத்து, பிரதமருக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது அவர்கள் மீது தேசத்துரோகம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர்கள் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.