“நான் ஆறு படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறேன். மரியாதை நிமித்தமாக பொன்னார் ஐயாவை சந்தித்துப் பேசினேன். தென் மாவட்ட மக்களுக்கு என்ன செய்யப்பட்டிருக்கிறது என்பது பற்றி அவருடன் கலந்து பேசினேன் .எனது கருத்துகளை பகிர்ந்து கொண்டேன்” என்ற ஆர்.கே.சுரேஷை இடை மறித்துக் கேட்டேன் “நீங்கள் பி.ஜெ.பி.யில் சேர்ந்து விட்டீர்களா?”
ஆர்.கே.சுரேஷ் திரைப்படத் தயாரிப்பாளர் மட்டுமல்ல. நடிகரும் ஆவார். அவரது முரட்டு மீசையும் சுழலும் விழிகளும் தோற்றமும் வில்லனுக்குரியதாக தெரிந்தாலும் மென்மையான மனிதர்.
அவர் அண்மையில் பாஜக தலைவர்களில் ஒருவரான பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அவர் அந்த கட்சியில் இணைந்து விட்டதாகவே செய்திகள் வெளி வந்தன.
இது தொடர்பாக அவரை தொலைபேசி வழியாக கேட்டபோது விளக்கமாக பேசினார்.
“கோ பேக் மோடி என சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? அவரது திட்டங்கள் இன்று கிராமம் வரை சென்றடைந்திருக்கிறது.மக்கள் பயன் பட்டிருக்கிறார்கள். இல்லைஎன்று சொல்ல முடியுமா?எனக்கு வேண்டியது நல்ல காரியம் நடக்க வேண்டும். அதுதொடர்பான சில விளக்கங்களை கேட்டேன்.அவ்வளவுதான். நான் அந்த கட்சியை ஆதரிக்கிறேன். சேரவில்லை. சேருவதைப் பற்றி நான் முடிவு செய்யவில்லை. தற்போது ஆறு படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறேன். எனக்குத் தொழில் சினிமா.”என்று சொன்னார்.
அவர் இப்படி சொன்னாலும் பெரிய அளவில் பல பிரமுகர்களுடன் பா.ஜ.க.வில் இணைத்துக் கொள்ளப்படுவார் என்றே தெரிகிறது.