அரசாங்கத்தை முறைத்துக் கொண்டால் அது எப்போது சிலிர்த்துக் கொள்ளும் என்பது அமைச்சர்களுக்கும் , அதிகாரிகளுக்கும் மட்டுமே தெரியும்.இங்கே ஜனநாயகம் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு.!
வாய்ப்பு வரும் வரை காத்திருப்பது முதலை மட்டும் அல்ல அரசும் அரசியலும்தான்!
அதிமுக அரசினை விஷால் எதிர்த்ததால் முதல் பலி தயாரிப்பாளர் சங்கம். நடிகர் சங்கத் தேர்தலை 6 மாதம் தள்ளிப்போட்டதால் அடுத்து இரையாகப் போவது நடிகர் சங்கம்தான்!இதற்கும் விஷால்தான் காரணம்என்கிறார்கள்.
நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடந்தது, வழக்கு நிலுவையில் இருக்கிறது. நீதி கிடைக்கும் என நம்பிக்கொண்டிருப்பவர்கள் அப்படியே இருக்க வேண்டியதுதான்.!இரண்டு வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்கிற முடிவையும் கோர்ட்டு தற்போது இரு வழக்காக விசாரிக்க வேண்டும் என சொல்லி விட்டது.
அரசுக்கு எத்தனையோ ராஜகுருக்கள் இருக்கிறார்கள். அதிலும் திரை உலகத்தில் அரசுக்கு ஆதரவானவர்கள் இருக்கிறார்கள். ஆதாயம் தேடிகள் எந்த அரசு வந்தாலும் விசுவாசம் காட்டக்கூடியவர்கள் ! அவர்களை நம்பி அரசு ஓர் அமைப்பின் ஆணி வேரையே வெட்டி விட முடியும்.
இதோ மின்னல் வெட்டுகிறது. பேரிடி பின்னால் வருகிறது என்பதை உணர்த்துவதற்கு!
நடிகர் சங்கத்தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் அக்டோபர் 15ம் தேதி எண்ணும் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இதற்குள் அபாயச்சங்கு!
தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன் மற்றும் செயலாளர் விஷாலுக்கு பதிவுத்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
தென்னிந்திய நடிகர் சங்கம் முறையாக செயல்படாமல் இருப்பதால், நிறை, குறைகள் மற்றும் புகார்கள் எதுவும் தெரிவிக்க முடியவில்லை என அந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள எம்.ஆர்.பி.சந்தனம், சித்திரலேகா ( எந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்?)புகார் தெரிவித்திருக்கிறார்கள்.
புகாரின் அடிப்படையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், செயலாளர் விஷால் ஆகியோருக்கு பதிவுத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
சென்னை ஹபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தின் நுழைவு வாயிலில் பதிவுத்துறை சார்பாக அக்டோர் 5ம் தேதி நோட்டீசும் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், தென்னிந்திய நடிகர் சங்க செயல்பாடுகளை கவனிக்க ஏன் சிறப்பு அதிகாரியை நியமிக்கக்கூடாது என்கிற தபால் வெடியை பதிவுத்துறை அதிகாரிஇணைத்திருக்கிறார்., நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், செயலாளர் விஷால் ஆகியோர் 30 நாட்களுக்குள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளார்.