கதை :ஜெகன் ,திரைக்கதை இயக்கம் :சுரேஷ் காமாட்சி, ஒளிப்பதிவு :பாலபரணி, வெளியீடு: லிப்ரா ரவீந்தர் சந்திரசேகர்,
சீமான்,ஸ்ரீ பிரியங்கா,முத்துராமன்,இ .ராமதாஸ்,அரிஸ்,லிங்கா, வி.கே.சுந்தர், குணா,காவேரி மாணிக்கம்.
***************
கருப்பு ஆடுகள் கண்ணுக்கு அதிக பரப்பளவில் தெரிகிற காவல் துறையில் கண்ணியம் மிகுந்த சிலர் அரிதாகவே தெரிவார்கள். அந்த சிலரும் ஒரு கருப்பு ஆட்டின் கட்டளைக்கு கட்டுப்படுகிற நிலை வந்தால்..?
அதிலும் ஒரு பெண் காவலர் மாட்டிக் கொண்டால்?அவளும் கடமை உணர்வு மிகுந்தவளாக இருந்து விட்டால்?
சொல்லவே வேண்டாம்.
அதிகாரி நினைத்தால் அந்த பெண்ணை நரகத்தில் தள்ளிவிடலாம்.! அதுதான் கதை. மழை பெய்து அந்த பெண் காவலரின் துயரம் கலைகிற காட்சி எஃகு மனமும் இளகி விடும். படம் பாருங்கள் புரியும்!
காவல் துறை அதிகாரி ஒரு பெண் காவலரை இச்சைக்கு இணங்கும்படி அதிகார பலமுடன் போனில் கேட்டுக் கொள்ளும் உரையாடலுடன் டைட்டில் தொடங்குகிறது.எதிர்பார்ப்புகள் எப்படியெல்லாமோ பறக்கிறது. வன்முறை, அடிஉதை சித்திரவதை ,ஏரில் பறக்கவிட்டு கம்பி கட்டி தொங்க விடல் இப்படி பழக்கப்பட்டு போன பலவீனங்கள் வந்து போகின்றன.
ஆனால் அப்படி எதுவுமே இல்லை. ஆனால் வலியின் வன்மை இருக்கிறது. அடப் பாவி நீ விளங்குவியா என்று இன்ஸ்பெக்டர் முத்துராமன் மீது எரிச்சல் வருகிறது. (இதுவே அவருக்கு பாராட்டுதான்!) முகமும் குரலும் கூடுதலாக அந்த மீசையும் அச்சமூட்டுகிறது.இயல்பு.
நட்ட நடு பாலத்தில் தகிக்கும் வெயிலில் தண்ணீரையும் இளநீரையும் குடித்து விட்டு வயிறு முட்டி சிறுநீர் போக முடியாமல் பெண் காவலர் ஸ்ரீ பிரியங்கா படும் அவஸ்தையை ரசிக்கும் அந்த அரக்கத்தனம் சில அதிகாரிகளுக்கே உரிய அடிஷனல் குவாலிபிகேஷன்.வாழ்த்துகள் முத்துராமன்.
பெண் காவலராக ஸ்ரீ பிரியங்கா.வாழ்ந்திருக்கிறார். குடிகார மாமன் .அவனால் குடும்பத்திலும் நிம்மதி இல்லை. ஆசைக் காதலன் அவனுடன் கொஞ்சவும் நேரமில்லை. மாமனையும் காதலனையும் வைத்து விளையாட்டு காட்ட நினைத்து சற்று சஸ்பென்சை வைத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி. மாமனை மணாளனாக நினைக்கவைத்து விளையாடி இருக்கிறார்கள் .பிற்பாதியில்தான் தெளிவாகிறது.
பெண் காவலரின் சிறுநீர் அவஸ்தையை பாலத்தின் நீர் மட்ட அளவினை உயர்த்தி காட்டுவதும்.மழையின் வேகத்தில் அவளது இயற்கை உபாதை தணிவதும் இயக்குநரின் உத்தி.பாராட்டுகள்.
ஒரு வெளிநாட்டு மந்திரி வந்தால் அவருக்காக போலீஸ்காரர்கள் படுகிற அவஸ்தை நாட்டின் நடப்பு.காவல்துறையினர் நன்றி சொல்ல வேண்டும்.
படம் முழுக்க பாலத்திலேயே நின்று விட்டாலும் ஸ்ரீ பிரியங்கா சந்திக்கிற நிகழ்வுகள் அவருக்கும் நமக்கும் ஆறுதல். சிறப்பாக நடித்திருக்கிறார். தமிழ்ப்பெண் என்பது தமிழ் சினிமாவில் அவருக்கு மைனஸ். அது இந்த படத்தில் பிளஸ் ஆகலாம்.
சீமான் வருவது சில காட்சிகளே என்றாலும் முத்துராமனை லெப்ட் அண்ட் ரைட் வாங்குவது அருமை. என்றாலும் அவரே முத்துராமனுக்கு பனிஷ்மென்ட் கொடுத்திருக்கலாம்.
காவலர்களில் இ.ராமதாசின் இரக்கம், அருகில் இருந்தபடியே அராஜகனை பார்வையினால் வெறுக்கும் வி.கே.சுந்தர், ‘பாதையைத் தேடாதே பாதையை போட்டுக் கொள்’ என்கிற தேசியத் தலைவரின் பொன் மொழியுடன் டிராக்டர் ஓட்டுகிற குணா ,பிச்சை எடுக்கிற காவேரி மாணிக்கம் ஆகிய மூன்று பத்திரிகையாளர்களையும் பாராட்டலாம்.
காவேரி மாணிக்கத்தின் கேரக்டரும் ,தண்ணீருக்கடியில் துணியைக் கட்டுகிற கேரக்டரும் சஸ்பென்சை கூட்டுவதற்கான ஐடியாவா?
சினிமா முரசத்தின் மார்க். 2.5 / 5