“சிறு படங்களுக்குத் தியேட்டர்கொடுப்பதில்லை” என கொட்டகை அதிபர்கள் மீது சிறு படத் தயாரிப்பாளர்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.
“அதில் உண்மை இல்லாமல் இல்லை. முன்னணி நடிகர்கள் படங்கள் என்றால் எவ்வித தயக்கமும் இல்லாமல் தியேட்டர்களை ஒதுக்கிக் கொடுத்து விடுவார்கள். சிறிய படங்கள் என்றால் மார்னிங் ஷோ அல்லது நைட் ஷோ மட்டும் கொடுத்து அதாவது ஏதாவது ஒரு ஷோ கொடுப்பார்கள்.
சிறிய படங்களுக்கு மக்கள் வந்து பார்த்த பின்னர்தான் அவர்கள் வழியாக பேச்சு பரவிய பின்னர்தான் கூட்டம் வர ஆரம்பிக்கும். இது உண்மை.
இதை காரணமாக வைத்து தியேட்டர்காரர்களும் அடுத்த நாளே படத்தைத் தூக்கி விடுவார்கள்.இதுதான் இத்தனை நாளும் நடந்து வருகிறது.”
—இப்படித்தான் இத்தனை நாளும் தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
இதற்கு இன்று ‘தேடு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட விழாவில் தியேட்டர் அதிபர்கள் சங்கப் பிரமுகர் ரோகினி பன்னீர்செல்வம் வழியாக பதில் கிடைத்திருக்கிறது.
தேடு படத்தின் தயாரிப்பாளர் சிவகாசி முருகேசன்,இயக்குநர் சுசி.ஈஸ்வரன், மேக்னா,சஞ்சய் மற்றும் இயக்குநர்கள் பாக்யராஜ்,பேரரசு பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
பன்னீர் செல்வம் கடுமையுடன் பேசினார்.
“எங்கள் மீது ஒரு சாயம் பூசப்பட்டு வருகிறது. சிறு படங்களுக்கு தியேட்டர் தருவதில்லை என்று சொல்லி வருகிறார்கள்.திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் அதிக அளவில் தியேட்டர்கள் இருந்தன.தற்போது அது குறைந்து 960 தியேட்டர்கள்தான் இருக்கின்றன. இதில் எப்படி எல்லாத் தியேட்டர்களிலும் சிறிய படங்களுக்கு இடம் கொடுக்க முடியும் என்று நம்புகிறீர்கள். அபத்தமான குற்றச்சாட்டு.வன்மையாக கண்டிக்கிறோம். வாரத்துக்கு எட்டு படங்கள் வருகின்றன.இருக்கிற தியேட்டர்களை கொடுக்கிறோம்.
இன்னும் சில நாட்களில் இரண்டு படங்கள் வரப் போகின்றன. 800 தியேட்டர்களில் 3 வாரம் வரை போகும். கிட்டத்தட்ட 4௦௦ சிறிய படங்கள் வரை வெளியாகாமல் இருக்கின்றன.எங்களுக்கு சின்ன படங்கள் ஓடினால்தான் 5 0 சதவீதம் கிடைக்கும். பெரியபடங்கள் என்றால் தயாரிப்பாளர்களுக்கு 75 சதவீதம் நாங்கள் கொடுக்க வேண்டியது இருக்கும் அப்படி இருக்கும்போது நாங்கள் தியேட்டர் கொடுக்க மாட்டோம் என்று சொல்வோமா?அரசிடம் சொல்லி அதிகமான அளவில் சிறிய தியேட்டர்களை திறக்க சொல்லுங்கள் அதை விட்டு எங்கள் மீது பாயாதீர்கள்?” என்று கடுமையுடன் பேசினார்