பயண ஏற்பாடுகளை அவரது நீண்ட கால நண்பர் ஹரி செய்திருந்தார்.ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்துக்கு ரிஷிகேஷ், கேதார்நாத் பகுதிகளில் உள்ள கோயில்கள், ஆசிரமங்களில் மடாதிபதி கள், ஆசிரம நிர்வாகிகள், ரசிகர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாபாஜியை ரஜினி தனது மானசீக குருவாக கருதுவதால், ஒவ்வொரு முறை இமயமலை செல்லும்போதும், இந்த குகைக்கு சென்று தியானம் செய்வது வழக்கம். பாபாஜி குகைக்கு சென்று வரும் பக்தர்களின் வசதிக்காக, அருகே உள்ள துவாராஹாட் என்ற இடத்தில் ‘குரு சரண்’ என்ற பெயரில் ரஜினி ஓர் ஆசிரமமும் கட்டியுள்ளார்.
இந்நிலையில், பத்ரிநாத் பயணத்தை முடித்துக்கொண்ட ரஜினி அங்கிருந்து துவாராஹாட் சென்றார். அங்குள்ள தனது குருசரண் ஆசிரமத்தில் சில மணி நேரம் தங்கி ஓய்வெடுத்தார். நேற்று பாபாஜி ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு தியானம், வழிபாடு மேற்கொண்ட பிறகு, சிறிது நேரம் ஓய்வெடுத்தார். உத்தராகண்டிலேயே நேற்று இரவு தங்கிய ரஜினி, மருத்துவர்களின் அறிவுரைப்படி,தனது10 நாள் ஆன்மிக பயணத் திட்டத்தை மாற்றி 5 நாள் ஆன்மிக பயணமாக முடித்துக்கொண்டு, இன்று சென்னை திரும்புகிறார்.
விரைவில், ‘தர்பார்’ படத்தின் டப்பிங் வேலைகள் மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்த உள்ளார்.
ரஜினியின் இமயமலை பயணம் குறித்து அங்கிருந்த அவரது நண்பர்கள் கூறியதாவது,
‘ரஜினி ஒவ்வொரு முறை இமயமலைக்கு வரும்போதும் உற்சாகம் அடைகிறார். இந்த உற்சாகமும், புத்துணர்ச்சியும் அவரை அடுத்த பல மாதங்களுக்கு இன்னும் உத்வேகத்துடன் செயல்பட வைக்கிறது. இந்த முறையும் அவர் மிகவும் உற்சாகத்துடன் இருந்தார். கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டர் பயணம், பத்ரிநாத்தில் இருந்து பாபாஜி குகைக்கு செல்லும் சில இடங்களில் நடை பயணம், மலையடிவாரத்தில் ஓய்வு, வழியில் டீக்கடை தென்பட்டால் உடனே நிறுத்தி நண்பர்களோடு அமர்ந்து டீ குடிப்பது என ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து செய்தார்.‘‘இயற்கையான சூழ்நிலையில தியானம், சுவாமி தரிசனம் என இந்த முறை பயணம் ரொம்ப திருப்தியா இருந்திச்சு’’ என்று ரஜினி மனப்பூர்வமாக சொல்லிக்கொண்டே இருந்தார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.