நடுவிலே பெரும் தளர்ச்சி.
இதயத்தில் படுத்துக் கொண்டிருந்த நினைவுகள் நெஞ்சக் கூட்டில் இருந்து விடுபட–வெளியில் வரத் துடித்தன.
அவையெல்லாம் எழுதப்பட வேண்டியவையா?
ஆயிரம் கேள்விகள்..ஆனாலும் காலத்தின் வேகம் -விவேகம் என்னை எழுதச் செய்தது .
- எழுதிய ஓவியம் பழுது படாமல்
- எழுந்து நடந்தது மாலையிலே
- இளமை இனி யாரிடமோ
- இறைவன் திருவுளம் எவ்விதமோ ?
கவி வேந்தன் கண்ணதாசனின் வரிகள் நினைவுக்கு வந்தன..
எத்தனை சுலபமாக சொல்லிவிட்டார் அந்த சக்கரவர்த்தி..
இதோ கின்னஸ் சாதனை பேரரசி..இன்று வரை முறியடிக்கப்படாமல் முனை மழுங்காத சாதனை சாம்ராஜ்யத்தின் பன்முக மகாராணி.
அவர்தான் செம்மீன் ஷீலா.
இவரும் நடிகர் பிரேம் நசீரும் இணைந்து 107 படங்களில் நடித்திருக்கிறார்கள். எத்தனையோ சாதனைகள் படைத்தவர்கள் பட்டயங்கள் வாங்கியோர் இருக்கிறார்கள்.
எனக்குத் தெரிந்த வரை இந்திய திரை உலகில் ஷீலா-பிரேம்நசீர் சாதனையை முறியடித்தவர் எவரும் இல்லை, என்றே சொல்வேன். கின்னஸ் சாதனையாளரை அன்றே உலகம் பாராட்டி விட்டது.
திருச்சூர் அருகில் கணிமங்கலம் என்கிற ஊரில் பிறந்தவர் ஷீலா. இவர் திரை உலகுக்கு வருவதற்கு முன்னரே எழுத்தாளர். வந்த பிறகு இயக்குனர்,நடிகை என இன்ன பிற சிறப்புகளும் வந்தன. செம்மீன்,கள்ளி செல்லம்மா என்கிற படங்கள் மறக்க முடியாத படங்கள் .
சத்யன் என்கிற அற்புதமான நடிகருடன் நடித்திருக்கிறார். மலையாளத்தின் அதிசயங்கள் இவர்கள்.!
தமிழ்த் திரை உலகில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தவர்களில் ஸ்ரீ தர் என்கிற மா மனிதரும் ஒருவர்.
அவரது கண்டு பிடிப்புத்தான் ரவிச்சந்திரன். ‘விஸ்வநாதன் வேலை வேண்டும் ‘என்று குணசித்திர நடிகர் டி.எஸ்.பாலையாவை கிண்டல் செய்து பாடிய இவருக்கு தமிழ்த் திரை உலகம் நல்ல வாய்ப்புகளை வழங்கியது.
தமிழ்,தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளிலும் ஷீலாவும் பிசியாகவே இருந்தார்..
திரை உலகில் காதல் வயப்படுவது என்பது புதிதல்ல.அது அரிதும் அல்ல. .100 நாள் நடக்கும் பிக்பாஸ் நிகழ்வுகளிலேயே காதல் வயப்படுவது எளிது என்றாகி விட்ட காலம் இது. சினிமாவும் அப்படித்தான்.
கட்டைப் பிரம்மச்சாரியையும் காதலிப்பார்கள். கெட்டி குடும்பஸ்தனையும் காதலிப்பார்கள்
ரவிச்சந்திரன் -ஷீலா இருவரும் காதலித்தார்கள். கல்யாணமும் செய்து கொண்டார்கள். இதைத்தான் கவியரசர் “நான் என்றும் நீ என்றும் ஏன் சொல்வது?நான் வேறோ,? நீ வேறோ யார் சொன்னது? நீயாகி நானாகி நாம் ஆனோம்”.என்று சொன்னார். இவர்களுக்குப் விஷ்ணு பிறந்தார்.
கவியரசர் சொன்னதை மறுபடியும் இங்கு நினைவு படுத்துகிறேன். அவரைப் படித்தவர்களுக்கு நிறைய எடுத்துக் காட்டுகளை கற்றுக் கொடுத்து விட்டுதான் சென்றிருக்கிறார்.
“ஒரு நல்ல உள்ளத்துக்கு எவ்வளவு சித்ரவதை? கடவுள் நம்பிக்கையின் மீதும், யோக்கியனாக இருப்பது பற்றியும் இங்கேதான் சந்தேகம் வருகிறது?
கள்வர்கள்,கயவர்கள்,காமுகர்கள்,சண்டாளர்கள்,சதிகாரர்கள் எல்லாம் ஆரவாரமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ விட்டு விட்டு , அப்பாவிகளின் மீது நோயைத் திணிப்பதுதான் ஆண்டவனின் வேலையா?” என மன வாசத்தில் சொல்லியிருப்பார்.
ஆண்டவன் ஷீலா -ரவிச்சந்திரன் வாழ்க்கையிலும் விளையாடிவிட்டான்.
மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி குழந்தை பெற்றுக் கொண்ட அவர்களின் வாழ்க்கையில் குறுக்கிட்டான். குதர்க்கம் விளைவித்தான்.
விளைவு ?
பிரிவு! மனமுறிவு மண வாழ்க்கையை உடைத்துப் போட்டது. மகன் விஷ்ணுவுடன் ஷீலா வாழ்ந்தார். தனிமையை அனுபவித்து வாழ அவர் ஒன்றும் துறவி அல்லவே! அவருக்கும் மணவிழா நடந்தது.
விஷ்ணு வின் பெயரில் ஜார்ஜ் சேர்ந்து கொண்டது.
வயதானாலும் திரை உலகில் இவர்கள் நீடித்தார்கள்.
காலம் வேகமாக நடந்தது காலனும் வேகமாக சேர்ந்தே நடந்தான்.
ரவிச்சந்திரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஐ.சி.யூ வில் இருந்த அவரின் உயிர் பிரிவதாக இல்லை.
எதோ ஒரு ஏக்கம் அவர் முகத்தில் தெரிவதாக உடன் இருந்தவர்களே பேசிக் கொண்டார்கள்.
அவரது கடைசி ஆசையை சொல்லும் நிலையில் இல்லையே!
பத்திரிகையாளர்கள் அப்பல்லோவுக்கு வழக்கம் போல வந்து சென்றார்கள்.
ரவிச்சந்திரன் குடும்பத்தினருக்கு சொல்ல முடியாத துயரம். அமைதியுடன் இறைவனடி சேரவேண்டும் என பிரார்த்தனை செய்தார்கள். குடும்பத்தினருக்கு வேண்டிய உறவினர்கள்,நண்பர்கள் வந்து போனார்கள் அப்படி வந்தவர்களில் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ் கண்ணப்பனின் மனைவி ஜெயந்தி கண்ணப்பனும் ஒருவர்.

“ஏம்மா அவரது கடைசி ஆசை ஜார்ஜை பார்க்க விரும்புவதாக இருக்குமோ?”
“இருந்தாலும் இருக்கலாம்.ஆனால் அவரை அவரது அம்மா அனுப்புவாங்களா ?”
“எதையும் கேட்காமல் முடிவு கட்டாதிங்க.கேட்டுப் பார்க்கலாமே?”
“யார் போய் கேட்பது?”
-இப்படியாக பெண்கள் பேசிக்கொண்டார்கள். ஜெயந்தி கண்ணப்பன் காதிலும் விழுந்தது.
“நான் போய் கேட்கவா?”என்று கேட்டார் ஜெயந்தி அம்மாள்.
ரவிச்சந்திரன் குடும்பத்தின் முழு சம்மதம் கிடைத்தது.இதன்பின்னர் என்ன நடந்தது?
திருமதி ஜெயந்தி கண்ணப்பனிடம் கேட்டேன்.
“அவர்கள் சம்மதம் சொன்னதும் நான் ஷீலா அக்காவிடம் பேசினேன். அவர் மனம் மிகவும் கலங்கிப் போய் விட்டது.. ஜார்ஜ் அவரது மகன் .அவரை பார்க்க வேண்டாம் என நான் சொல்ல மாட்டேன். ஆனால் ஜார்ஜை நீதான் கூட்டிக் கொண்டுபோகணும். சரியா?”என்று ஷீலா கேட்டார். நானும் சரி சொல்லி விட்டு அழைத்துச் சென்றேன்.
அப்பாவைப் பார்த்ததும் ஜார்ஜ் ரொம்பவுமே உடைந்து போனான். டாடி டாடி என்று கையைப் பிடித்துக் கொண்டு அழுதான்.
அப்போதுதான் நாங்கள் அந்த அதிசயத்தைப் பார்த்தோம். ரவிச்சந்திரனின் ஒரு கண்ணில் இருந்து நீர் வடிந்தது. முகத்திலும் மாற்றம் இருந்தது. ஐசியூவில் இருந்து வெளியில் வந்ததும் ரவியின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜார்ஜின் கையைப் பற்றிக் கொண்டார்கள். இதற்கு இரண்டு நாள் கழித்து ரவியின் உயிர் பிரிந்து விட்டது” என ஜெயந்தி சொன்னார்.
அப்படியானால் ஆன்மா இருப்பது உண்மைதானா?
இன்னும் நினைவுகள் நீளும்!
—தேவிமணி