கடந்த சனிக்கிழமை.
இந்தியத் தலைநகரம் டெல்லியில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஏன்,எதற்காக நடத்தப்பட்டது ?
தேசப்பிதா மகாத்மாவின் 150-ஆவது பிறந்தநாள் விழாவைப் பற்றிய ஆலோசனை கூட்டம் .
இந்த நிகழ்ச்சியில் முழுமையாக கலந்து கொண்டவர்கள் ஷாருக், அமீர்கான்,கங்கனா ரனாவத்,ஜாக்குலின் பெர்னாண்டஸ், இமிதாஸ் அலி, ஏக்தா கபூர், அனுராக் பாசு உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள்.!
மருந்துக்குக் கூட தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவர் கூட இல்லை.
“ஏன் எங்களை அழைக்கவில்லை” என தென்னகத்தைச் சேர்ந்த எந்த நடிகரும் ,நடிகையும் கூட கேட்கவில்லை.
ஆனால் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு நடிகரின் மனைவி கேட்டிருக்கிறார்.
அவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகள். நடிகர் ராம் சரணின் மனைவி. அப்பல்லோ மருத்துவ மனையின் உதவித் தலைவர், உபாசனா !
தமிழகத்தில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கிற கமல்,ரஜினி ,அஜித், சூர்யா , விஜய் உள்ளிட்ட எந்த ஜனநாயகக் காவலரும் கேட்கவில்லை.
மோடியை பகைத்துக் கொள்ளலாமா என்கிற பயமாகவும் இருக்கலாம்.!
நடந்து முடிந்த தேர்தலில் தென்னகமே பாஜகவை புறக்கணித்து விட்ட நிலையில் தென்னக நடிகர்களை மோடி எப்படி அழைப்பார்?
ஆனால் அவர் பிரதமராக பொறுப்பேற்ற மறு நொடியே இந்திய முழுமைக்குமான பிரதமர்.
வட நாட்டு நடிகர்களை மட்டுமே அளித்து அவர் உரையாடியதில் இருந்து ஒன் இந்தியா என்கிற கோஷம் வெற்றுக் கோஷமாகி விட்டதே!
ஆனால் தென்னக நடிகர்களுக்காக ஒரு தனி அஜண்டா இனி உருவாகலாம். அதற்கு திருமதி உபாசனாவின் கேள்வியே முழுமையான காரணமாக இருக்க முடியும்.
அப்படி என்னதான் உபாசனா கேட்டிருந்தார்?
“அன்புள்ள மோடிஜி,
உங்களை பிரதமராக அடைந்ததற்கு தென்னகம் பெருமை அடைந்திருக்கிறது. ஆனால் அண்மையில் பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமே முழுமையாக நிரம்பி இருந்த ,நீங்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் மருந்துக்குக்கொட்ட ஒரு தென்னக நடிகரை பார்க்க முடியவில்லையே! இது முழுமையான புறக்கணிப்பு .முறையான உணர்வுடன் செயல்பட்டிருக்க வேண்டும்.” என்பதாக உபாசனா கேட்டிருந்தார்.
இந்த டிவீட்டை ‘லைக்’ பண்ணியிருக்கிறார் பிரதமர் மோடி! எவ்வளவு பெரிய மனசு!
தமிழக நடிக நடிகையரே உங்களின் தன்மான உணர்வு என்ன சொல்கிறது?