தமிழ்த் திரையுலக மூத்த இயக்குநர்களில் ஒருவரும், இயக்குநர் திலகம் என்று பாராட்டப்பட்டவருமான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86.
மிகச் சிறந்த வசனகர்த்தாவாக ஆரம்பத்திலேயே தனது முத்திரையை பதித்துவிட்ட இயக்குநர் திலகம் கே.எஸ்.ஜி., 45 படங்களை இயக்கியிருக்கிறார். இதில் 33 படங்களை இவரே தயாரித்திருக்கிறார். இதில் 8 படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.
கே.எஸ்.ஜி. இயக்கிய படங்களில் ‘சாரதா’, ‘தெய்வத்தின் தெய்வம்’, ‘கற்பகம்’, ‘ஆயிரம் ரூபாய்’, ’கை கொடுத்த தெய்வம்’, ‘என்னதான் முடிவு’, ‘பேசும் தெய்வம்’, ‘கண்கண்ட தெய்வம்’, ’குலமா குணமா’, ‘சித்தி’, ‘செல்வம்’, ‘பணமா பாசமா’, ‘குலவிளக்கு’, ’ஆதிபராசக்தி’, ‘குறத்தி மகன்’, ‘நத்தையில் முத்து’, ‘வந்தாளே மகராசி’, ‘உறவுக்குக் கை கொடுப்போம்’, ‘தசாவதாரம்’, ‘பாலாபிஷேகம்’, ’ஸ்ரீகாஞ்சி காமாட்சி’, ‘அடுக்கு மல்லி’, ‘தேவியின் திருவிளையாடல்’, ‘படிக்காத பண்ணையார்’, ‘பார்த்தால் பசு’, ’அத்தைமடி மெத்தையடி’, ‘காவியத் தலைவன்’ ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.
நடிகைகள் கே.ஆர்.விஜயா, ஜெயசித்ரா, பிரமீளா, விஜயநிர்மலா, டி.கே.பகவதி, எஸ்.வரலட்சுமி, சரோஜாதேவி, பத்மினி ஆகியோரை அறிமுகப்படுத்தியவரும் இவரே. மேலும் குழந்தை நட்சத்திரங்களாக ஸ்ரீதேவி, ஷகிலா, பேபி சுதா ஆகியோரை திரையில் அறிமுகப்படுத்தியதும் இவரே.
‘கற்பகம்’ திரைப்படத்தில் சம்பாதித்த பணத்தை விருகம்பாக்கத்தில் ஆவிச்சி பள்ளியின் அருகேயிருந்த இடத்தை வாங்கி கற்பகம் ஸ்டூடியோவை நிர்மாணித்தவர்.
இவருடைய மகன் கே.எஸ்.ஜி. வெங்கடேஷை ‘அத்தைமடி மெத்தையடி’ படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் சமீபத்தில் சதுரங்க வேட்டை படத்திலும் நடித்திருந்தார்.
இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இறுதிச் சடங்குகள் சென்னையில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றன.