மரண பயம் இருக்கே..எத்தகைய வலுவான மனதையும் வளைத்துப் போட்டு விடும்.!
அணு அணுவாக செத்துப் போவார்கள். நரக வாழ்க்கை.!
அத்தகைய வாழ்க்கையையும் வாழ்ந்து பார்த்து விட்டு திரும்பி இருக்கிறார் பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா.
“கண்ணாளனே ,எனது கண்ணை நேற்றோடு காணவில்லை” என்கிற பாடலில் மனிஷாவின் உயிர் துடிப்பான நடிப்பு இன்னமும் கண்களில் நீந்துகிறது அல்லவா! நாயக்க மன்னர் கட்டிய மாளிகையின் மாபெரும் தூண்களில் அந்த இன்னிசை இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அந்த சிறந்த நடிகையின் கர்ப்பப்பையில் கேன்சர். புற்று நோய்!அதுவும் கடைசி கட்டத்தில்.!
எப்படி இருந்திருக்கும்?
“இன்னும் எத்தனை காலம் நான் உயிருடன் இருப்பேன்?”
தனக்கு சிகிச்சை அளித்த டாக்டரிடம் கேட்கிறார் மனிஷா.
ஆனால் கடுமையான சிகிச்சை கடைசி நிமிடவாழ்க்கை, சிகிச்சையின் பலன் எல்லாம் தெரிய வந்தபோது நிம்மதி பெருமூச்சு!
நோயினால் முறிந்து போன அவரது கல்யாணம் ,தடைபட்டுப் போன திரைப்பட வாழ்க்கை இவையெல்லாம் மீண்டும் வருமா?
ஆனால் திரை உலக வாழ்க்கை மட்டும் திரும்பவும் அமைந்தது.
அந்தளவில் அவருக்கு மகிழ்ச்சியே!