கதை ,வசனம் : அட்லீ ,ரமணா கிரிவாசன், ஒளிப்பதிவு: ஜி.கே.விஷ்ணு ,இசை:ஏ.ஆர் ரகுமான். கலை இயக்குனர் : முத்துராஜ்.
விஜய்,நயன்தாரா,ஜாக்கி ஷெராப்,யோகிபாபு,டேனியல் பாலாஜி,ஆனந்த்ராஜ்,
*************
மூன்று மணி நேரம்.மிகவும் நீ……ள ….மான படம். நாயகன் விஜய்க்கு இந்த படத்தின் மிகப்பெரிய பலம் ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் .
மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட படம். வீண் வதந்தி செய்திகளால் என்னவோ எதோ இருக்கிறது என ரசிகர்களை எதிர்பார்க்க வைத்த படம். ஆனால் அந்த அளவுக்கு படம் இருக்கிறதா?
கொடுத்த வாக்குறுதிகளை மக்கள் மறந்திருப்பார்கள் என அரசியல்வாதிகள் மட்டுமில்லை ,சினிமா நடிகர்களும் நம்பத் தொடங்கி இருக்கிறார்கள். சாக்தே இந்தியா, என்கிற இந்திப் படம் ,கென்னடி கிளப் என்கிற தமிழ்ப்படம் இரண்டும் பல காட் சிகளில் நினைவுக்கு வந்து நமது உச்சந்தலையில் குட்டுகிறது .
பெண்கள் கால் பந்து கோச்சர் விஜய்யின் குற்றப்பின்னணி ஒரு தடையாக இருந்தாலும் அதை தனது புத்திசாலித்தனமான ரவுடித்தனத்தினால் உடைத்து மேலே வந்து விடுகிறார். கால்பந்து போர்டு தலைவர் ஜாக்கி ஷெராப்பின் சதி வேலைகளை உடைத்து எப்படி தமிழ்நாட்டு அணிக்கு வெற்றியைத் தேடித் தருகிறார் என்பதுதான் கதைச் சுருக்கம் .
ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு இருவரும் இந்த கதையை காப்பாற்ற மிகவும் பாடுபட்டிருக்கிறார்கள். இந்த படத்தில் வரும் அளவுக்கு ஸ்டேடியம் ,கால்பந்து விளையாட்டு வேறு எந்தப்படங்களிலும் அமைந்திருக்கவில்லை. வழக்கமான கதையை தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள்.
ஆசிட் வீச்சு , ஆசார குடும்ப வாழ்க்கை இவை போன்ற நிகழ்வுகளால் எத்தகைய வீராங்கனைகள் வேஸ்ட் ஆக்கப்படுகிறார்கள் என்பதை சுட்டியதற்காக அட்லியை பாராட்டலாம்.
விஜய்க்கு இரு வேடம். அப்பா,மகன்.
இளமைத் துள்ளல் என்பது மகன் விஜய்க்கு.! வித்தியாசமான கேரக்டர் அப்பா விஜய்க்கு. கட்டைக்குரல்,அவ்வப்போது திக்கல் .செமத்தியான பாடி லாங்குவேஜ் .அப்பா விஜய்யை தியேட்டரே கொண்டாடுகிறது. விக்கல் வருகிறபோது மாறுகிற முகபாவம் அற்புதம். விஜய்யின் நடனம் சண்டைக்கு காட்சிகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை.
வர வர நயன்தாராவை ஷோ கேஸ் பொம்மையாகவே பயன்படுத்துகிறார்கள். அந்த வரிசையில் இந்தப் படமும் எண்ணிக்கையில் ஒன்று கூடுகிறது.
ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை இரண்டாம் பாதியை மிகவும் கவுரவப்படுத்தி இருக்கிறது.
முற்பாதியில் இல்லாத கதை ஓட்டம் இரண்டாம் பாதையில்தான் இருக்கிறது.
சினிமா முரசத்தின் மார்க் : 3 / 5