ராபர்ட் மாஸ்டர் இயக்கி நடித்திருக்கிற படம்தான் ‘அராத்து’
அமரர் எம்.ஜி.ஆரின் பேரன் ஜுனியர் ராமச்சந்திரன் வில்லனாக நடித்திருக்கிறார்.ராபர்ட் குடும்பம், ஜுனியர் ராமச்சந்திரன் குடும்பம் என குடும்பம் குடும்பமாக அராத்து இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவின் சிறப்பு அராத்து படக் குழுவினர் கருப்பு வேட்டி ,கருப்புச்சட்டை என யூனிபார்மில் வந்திருந்தார்கள் .திராவிடர் கழகக் கூட்டமா,அய்யப்ப பக்தர்கள் கூட்டமா என கணிக்க முடியாத அளவுக்கு வந்திருந்தாலும் தமிழினப் பற்றுள்ளவர்களாக இருந்தனர்.
படத்தின் பாட்டிலும் “கொம்பு வச்ச சிங்கம்டா! வீரமான தமிழன்டா!முதுகு காட்டி ஓடல. அமெரிக்காவே ஆடிப்போச்சு ,அப்துல் கலாம் மூளைடா !”என்கிற வரிகள் . இந்த பாட்டுக்கு வந்திருந்த மொத்த கூட்டமும் ஆர்பரித்தது. ஸ்ரீ காந்த் தேவாவின் இசை வெறி ஏற்றும் வகையில் அமைந்திருந்தது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தவர்களில் ராதாரவிதான் முக்கியமான பேச்சாளர்.அவர் என்ன பேசப்போகிறார் என்பதை ஊடகத்தினரும் எதிர்பார்த்தார்கள்.
“இன்று இந்தியாவை பிர்லாதான் ஆட்சி செய்கிறார்” என பூடகமாக சொல்லி விட்டு வேற சப்ஜெக்டுக்கு சென்று விட்டார்.
“ஆர் என்கிற எழுத்தில் தொடங்கினால் அதிர வைக்கும். ராதா ,ராதாரவி, ரஜினி என இப்படி உதாரணமா சொல்லலாம். ராபர்ட் என்கிற பெயர் அதிர வைக்கும். நடிப்பில் கமலை பின்பற்று.மனுசனா இருக்க ரஜினியை பின்பற்று. இது ரெண்டும் சினிமா நடிகனுக்கு தேவை.
நான் முகமூடி போட்டுக் கொண்டு பேசுகிறவன் இல்லை. என் முகம் பார்த்து திட்டுறவன் எவனும் இல்லை.முதுகுக்குப் பின்னால் பேசுகிறவனைப் பத்தி கவலைப்படவும் மாட்டேன்.என் நாக்குக்கு எவனும் என்னை நடிக்கிறதுக்கு கூப்பிடக்கூடாது .ஆனா நல்ல நடிக்கிறேன்னு சொல்லி கூப்பிடுறாங்க. வாய்ப்புக்காக புகழ்ந்து பேசுறது,பம்முறதுன்னு நிறைய பேர் இருக்காங்க.
கருப்பு டிரஸ் போட்டுக்கிட்டு வந்திருக்கீங்க. புரட்சிகரமாக இருக்கு. ஒரு காலத்தில கருப்பு டிரஸ் போட்டா அரெஸ்ட் பண்ணுவாங்க.
இப்பல்லாம் பொன்னை விரும்பும் பூமியிலேன்னு பாடுனா ரசிகன் ஓடிப் போயிடுவான் .அந்த பாட்டைக் கூட குத்துப் பாட்டா போட்டாதான் ரசிப்பான்.
இப்பல்லாம் மேடையில் ரொம்பவும் பொய் பேசுறாங்க. அந்த தலைவரை கட்டிப்பிடிச்சேன் ,கன்னத்தில முத்தம் கொடுத்தேன்னு சொல்றாங்க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் இலங்கைத் தமிழர்களுக்கு நிதி திரட்டி கொடுத்தவன் நான்.
எம்.ஜி.ஆர் .சித்தர்.அவர் மாதிரி இன்னைக்கு யார் இருக்கா?
தியேட்டர்ல போய் படத்தைப் பாருங்கன்னா இந்த கேடு கெட்ட ஜனங்க கேட்கிறதில்ல.திருட்டு விசிடில யாரும் படம் பார்க்காதீங்க!” என்று ராதாரவி கேட்டுக்கொண்டு பேச்சை நிறைவு செய்தார்.