மைனா, சாட்டை, மொசக்குட்டி ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் மற்றும் ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் “சவுகார்பேட்டை” படம் இம்மாதம் வெளியாக உள்ளது. ஸ்ரீகாந்த் – ராய்லட்சுமி நடித்திருக்கும் இப்படம் தரமாக எடுக்கப்பட்டுள்ளதாலும், வியாபாரம் திருப்திகரமாக நடந்துள்ளதாலும் படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குனர் வடிவுடையானுக்கு புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளனராம். அதோடு மட்டுமல்லாமல், அடுத்த அப்டத்தை இயக்கம் பொறுப்பையும் ஒப்படைத்துள்ளனராம்.
அடுத்த படமான “பொட்டு” படத்தில் நாயகனாக பரத் நடிக்கிறாராம். கதாநாயகியாக முன்னணி நடிகை ஒருவரை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனராம். மேலும் சரவணன், கருணாஸ், சுமன், சிங்கம்புலி, ஊர்வசி ஆகியோரும் நடிக்கிறார்களாம். நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் இசையமைக்கிறாராம். இப்படத்தை வடிவுடையானே எழுதி இயக்குகின்றாராம். படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் துவங்க உள்ளதாம். இப்படமும் சவுகார்பேட்டை போன்றே திகில் கலந்த பேய் கதையாக உருவாக உள்ளதாம்.
புது காரு, திகில் படம் பொட்டு என இரட்டை லட்டு கிடைத்த மகிழ்ச்சியில் திளைக்கிறாராம் இயக்குனர். தயாரிப்பாளர்களை மகிழ்விக்கும் வெகுசில இயக்குனர்களே தமிழ்சினிமாவில் உள்ளனர். அதுவும் அடுத்த படத்தில் நிலைப்பது என்பது அபூர்வம். அந்த வகையில் இந்த வடிவுடையான் அடுத்த படத்திலும் தயாரிப்பாளரை மகிழ்விப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.