கதை, இயக்கம் சுந்தர்.சி.
திரைக்கதை சுந்தர்.சி,சுபாவெங்கட்
நடிகர்கள்: விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி,
ஆகன்ஷா பூரி, கபிர் துஹான் சிங்.
ஒளிப்பதிவு: டட்லி,
இசை:‘ஹிப் பாப் தமிழா’ ஆதி
‘ஆம்பள’ படத்திற்கு பிறகு இயக்குனர் சுந்தர்.சி.யும் விஷாலும் இணைந்துள்ள படம்,ஆக்ஷன்.
‘ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்’ ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஆகன்ஷா பூரி, கபிர் துஹான் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். வழக்கமான சுந்தர்.சி.யின் ஃபார்முலாவிலிருந்து சற்று விலகி, முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
ரசிகர்களை மகிழ்விக்குமா இந்த ஆக்ஷன்?
நேர்மையான முதலமைச்சர் பழ. கருப்பையா. அவரது இரண்டு மகன்களான ராம்கி, துணை முதல்வராகவும் விஷால், இராணுவ அதிகாரியாகவும் இருக்கின்றனர்.
ராம்கியின் நெருங்கிய நண்பர் வின்செண்ட் அசோகன், பழகருப்பையா தலைமையில் நடக்கும் பொதுக்கூட்ட மேடையில் வெடிகுண்டை வெடிக்கச்செய்கிறார். இதில் பிரதமர் வேட்பாளர், விஷால் திருமணம் செய்யவிருந்த ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்பட பலர் கொல்லப்படுகிறார்கள்.
இந்த சதிச்செயலை செய்தவர்களை கண்டுபிடிக்க விஷாலும் அவரது தோழி தமன்னாவும் களமிறங்குகின்றனர். இதில், இந்தியாவில் பெரிய குண்டுவெடிப்புக்களை நடத்திய பாகிஸ்தான் அரசு பாதுகாப்பிலிருக்கும் தீவிரவாதி மாலிக் ( கபிர் துஹான் சிங் ) என தெரிய வருகிறது.விஷால், தமன்னா இருவரும் தீவிரவாதி மாலிக்கை பாகிஸ்தான் அரசுக்கு தெரியாமல் கைதுசெய்து இந்தியாவுக்கு கொண்டுவருவது தான் படத்தின் கதை.
விஷாலை வைத்து ஒரு ஸ்டைலிஷான ஆக்ஷன் படத்தை கொடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர் சுந்தர்.சி. அவரது முயற்சிக்கு கேமிரா மேன் டட்லி, ஸ்டன்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் ஆகியோர் உறுதுணையாக இருந்துள்ளனர்.‘ஹிப் பாப் தமிழா’ ஆதியின் பின்னணி இசையும், ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பும் படத்தின் விறுவிறுப்புக்கு உதவியிருக்கிறது.
விஷால் , ஆக்ஷன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் என்பதை ஒவ்வொரு காட்சியும் வெளிப்படுத்துகிறது. குறிப்பாக பைக் சேஸ் காட்சியை சொல்லலாம். விஷாலுடன் இணைந்து கொண்டு தமன்னாவும் அதிரடி ஆக்ஷனில் பாராட்டும்படி நடித்திருக்கிறார்.
ப்ரொஃபெஷனல் கில்லராக வரும் ஆகன்ஷா புரி கொஞ்ச நேரமே வந்தாலும் கிளாமரில் கலக்கியுள்ளார். சுந்தர்.சி.யின் கிளாமர் ‘டச்’ அதோடு அதிரடி சண்டைகாட்சிகளிலும் அசத்துகிறார்.
விஷாலின் மைத்துனராக வந்து காமெடி என்ற பெயரில் இம்சை செய்கிறார் ஷாரா. கம்ப்யூட்டர் ஹேக்கராக வரும் யோகி பாபு ஒரு சில காட்சிகளில் வந்தாலும் சிரிக்க வைக்கிறார்.
படத்திற்கு பலமாக பல விஷயங்கள் இருந்தாலும், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இந்தப்படம் ஆக்ஷன் பிரியர்களுக்கான லாஜிக் இல்லாத அதிரடி ஆக்ஷன் படம்!
சினிமா முரசத்தின் மதிப்பெண் 2/5