இயக்கம்: விஜய் சந்தர்.
நடிகர்கள்: விஜய் சேதுபதி, ரிஷி கண்ணா,
நிவேதா பெத்துராஜ், சூரி, நாசர்.
ஒளிப்பதிவு:வேல்ராஜ் ,இசை:விவேக் மெர்வின்.
தேனி மாவட்டத்தில் உள்ள மருத மங்கலத்தின் செல்வந்தர் தேவராஜ் (நாசர்). அவரது மகன் சங்கத்தமிழன் (விஜய் சேதுபதி). இருவரும் ஊர் மக்களின் நன்மைக்காகவும், நலனுக்காகவும் இருந்து வருகிறார்கள்.
தேவராஜால் எம்.எல்.ஏ. ஆன குழந்தைவேலு (அசுதோஷ் ராணா) , நயவஞ்சகமாக விளை நிலங்களை வாங்கி அந்த நிலத்தில் காப்பர் இண்டஸ்ட்ரி ஒன்றை கட்ட கார்ப்பரேட் முதலாளி சஞ்சய்க்கு (ரவி கிஷன்) உதவுகிறார்.
இந்த காப்பர் இண்டஸ்ட்ரி வெளியேற்றும் கழிவுகளால் விவசாயம் முற்றிலும் அழிவதோடு, மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் தேவராஜ் இந்த காப்பர் இண்டஸ்ட்ரி கட்டுவதை தடுக்கிறார்.
அதன் காரணமாக ஏற்படும் மோதலில் எம்.எல்.ஏ. குழந்தைவேலு தேவராஜ், சங்கத்தமிழன் இருவரையும் வெட்டி சாய்க்க காப்பர் இண்டஸ்ட்ரி கட்டி முடிக்கப்பட்டதா? இல்லையா? என்பதே சங்கத்தமிழன் படத்தின் கதை.
விஜய் சேதுபதி, நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா, நாசர், ஸ்ரீரஞ்சனி, மாரிமுத்து, கல்லூரி வினோத், ஸ்ரீமன் , அசுதோஷ் ராணா , ரவி கிஷன் உட்பட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்துக்கொண்டு, ஒரு சோஷியல் மெசேஸோடு. பக்கா மசாலா படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் விஜய் சந்தர்.
தோற்றத்தில் பெரிய மாறுதல் இல்லாவிட்டாலும் சங்கத்தமிழன், முருகன் என இரண்டு கதாபாத்திரங்களில் கிடைத்த இடங்களிலெல்லாம் விளையாடியிருக்கிறார், விஜய்சேதுபதி. காதலியை ரசிப்பதிலும், வில்லன்களை அடித்து பறக்கவிடுவதிலும் அவரது ரசிகர்களை திருப்தி படுத்தியுள்ளார்.
ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் இருவரும் அவர்களுக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். சூரி காமெடிக் காட்சிகள் ஒரு சில இடங்களில் சிரிப்பை வர வைக்கிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரிய பலம். விவேக்- மெர்வின் இசையில் பாடல்கள் பரவாயில்லை!
கமர்ஷியல் படத்திற்கேற்ற அனல் அரசுவின் சண்டைக் காட்சிகள் ஓகே!
லாஜிக் பற்றி பெரிதாக கவலைப் படாத இயக்குனர் விஜய் சந்தர், திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருந்தால் சங்கத்தமிழன் சாகசத் தமிழனாக இருந்திருப்பான்.