தமிழ் சினிமாவில் எடிட்டராக புகழ் பெற்ற ஆண்டனி, முதல் படத்திலேயே நல்ல இயக்குனர் என்ற முத்திரையை பதித்துள்ளார். ‘ஒரு நாள் இரவில்’ படம் ‘ஷட்டர்’ என்ற மலையாளப்படத்தின் ரீமேக் என்றாலும் அதைவிட அதிக சுவாரஸ்யமாய் எடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் இருந்து நிறைய காட்சிகளையும், காட்சியமைப்புகளையும் புதியதாய் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலுமும் பிற மொழிகளில் வெற்றிபெற்ற படங்களை தமிழுக்கு ஏற்றார்போல் மாற்றுகிறேன் என்ற பெயரில் கொதறி எடுத்துவிடுவார்கள் சில இயக்குனர்கள். ஆனால் ஆண்டனியின் இப்படத்தை பார்பார்ப்பவர்களுக்கு மலையாளப்படமே பிடிக்காமல் போய்விடும். அந்த அளவிற்கு மிகநேர்த்தியாக எதார்த்தமாகவும் எடுத்துள்ளார். அதற்கு காரணம் காட்சியப்புகள் மட்டும் அல்ல, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மிகச்சரியான நபர்களை தேர்ந்தெடுத்ததே முக்கிய காரணம்.
மலையாளப்படத்தை பார்த்துவிட்டு இந்தப்படத்தை பார்த்தால் கூட முற்றிலும் மாறுபட்ட அனுபத்தை கொடுக்கும் இந்த ஒரு நாள் இரவில். அப்படத்தில் வசனமாக வரும் காட்சிகளை இதில் படமாகவும், சில தேவையற்ற காட்சிளை நீக்கியும் ரசிகர்கள் எதை ரசிப்பார்கள் என துல்லியமாக கணித்து படத்தை இயக்கியுள்ளார் ஆண்டனி. மேலும் படத்திற்கு இன்னொரு பக்கபலம் வசனம். யூகிசேது எழுதிய வசனங்கள், நம்மை அறியாமல் சில இடங்களில் கண்களை கலங்கவைக்கின்றன. ஒரு விலை மாதுவையோ, மாமா என்ற வார்த்தைக்கும் கூட கலங்கம் உண்டாக்காத படி வசனங்கள் அமைத்துள்ளார். அதைவிட அவருடைய நடிப்பு இன்னும் அருமை. ரமணா படத்திற்குபின் பெயர்சொல்லும் கதாப்பாத்திரம் அமைந்துள்ளது அவருக்கு. மேலும், இவர்கள் நினைத்ததை போலீஸ் அதிகாரியாக வரும் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு அழகாக காட்சி பதிவு செய்துள்ளார். ஆண்டனியின் திரைக்கதைக்கும், யூகியின் வசனத்திற்கும் உயிர்கொடுத்துள்ளது நவீன் ஐயரின் இசை. தன் இசையால் படம் பார்பவர்களை மகுடி பாம்பாக மாற்றியுள்ளார். நம் அந்த ஷட்டருக்குள் இருந்தால் என்ன மனநிலையில் இருப்போமோ, அப்படி ஒரு பதற்றத்தை உண்டாக்குகிறது அவருடைய இசை.
மேலும், சத்யராஜ் ஒரு ஷட்டருக்குள் மாட்டிதவிக்கும் காட்சி பார்பவர்களையே பாரிதாபத்தை ஏற்படுத்துகிறது. சத்யராஜுக்கும், அந்த கதாப்பாத்திரத்திற்கும் அப்படி ஒரு பொருத்தம். விலை மாதுவாகவரும் அனுமோல் பார்பதற்கு மட்டுமல்ல, நடிப்பிலும் நம்மை கவர்கின்றார். அந்த வாயடி பெண்ணிடம் இருந்து தப்பிக்க பணம், நகைகள் அனைத்தையும் சத்யராஜ் கழற்றி வைப்பதும், இறுதியில் உழைக்காத காசு உடம்பில் ஒட்டாது என அனுமோல் திருப்பிதரும் காட்சியும் ‘நச்’. அந்த ஷட்டருக்குள் சிக்கியதால்தான், தன்னை சுற்றி யார் நல்லவர்கள், கெட்டவர்கள் என சத்யராஜ் தெரிந்துகொள்ளும் போது, நமக்கும் ஒரு நிமிடம் நட்பில் எவ்வளுவு கொடிய விஷம் கொண்ட நட்புகள் அருகில் இருக்குமோ என திகிலடையவைக்கிறது. மகளாக வரும் கதாபாத்திரத்திற்கு மலையாளத்தில் அதிக காட்சிகள் இருந்தாலும் தமிழில் குறைவு தான். அப்படியும் கூட மகளாக நடித்துள்ள திக்ஷிதாவின் மேல் படம் பார்பவர்களின் பார்வை நச் என பட்டுவிட்டது. இந்த பொண்ணு தமிழ் சினிமாவில் இன்னொரு ரவுண்ட் வரும்(அப்படியே நடக்கட்டும்) என்று சிலரிடம் வாழ்த்து பெறும் அளவிற்கு, தனக்கு கொடுத்த சிறிய முக்கியமான ரோலில் கலக்கியுள்ளார். படத்தில் உள்ள மூன்றாவது முக்கிய கதாபாத்திரம் ஆட்டோ ட்ரைவராக வரும் வருணுக்கு இது முதல் படம். அவரிடம் மோசமான நடிப்பு இல்லையென்றாலும், அவருடைய கதாப்பாத்திரம் வரும்போது மட்டும் சீரியசான இடங்களில் கூட விளையாட்டு தனம் காணுவதுபோல் உள்ளது அவருடைய முகபாவனை. அதை சரி செய்திருந்தால் அவருடைய கதாபாத்திரமும் மிகச்சரியாக பொருந்தியிருக்கும்.
மகளை தவறாக புரிந்துகொள்ளும் அப்பா, ஒரு பெண்ணிடம் சிக்கிய அப்பாவை சஸ்பென்சாக காப்பாற்றும் மகள், ஒரு சிறிய வசனத்தில் இவர்களுக்குள் ஏற்படும் புரிதல்கள் அழகாககாட்சி படுத்தபட்டுள்ளது. மேலும் பிள்ளைகள் மீது நம்பிக்கை வைக்காத தந்தைகளுக்கு, இப்படம் ஒரு பாடமாக அமையும். இப்படத்தில் சில காட்சிகள் முன்கூட்டியே கணிக்கும்படியாக இருந்தாலும், அதை படமாக்கிய விதம்தான் நம்மை ரசிக்கவைக்கின்றது. அதில் ஒன்று தான் கிளைமேக்ஸ். யூகி, அனுமோல் சந்திப்பு ஒட்டுமொத்த படத்திற்கும் ஒரு உயிர் நாடி.
மொத்தத்தில் இப்படம் பார்பவர்களின் இதயத்தை உறையவைக்கும் அந்த ஒரு நிமிடம்.