ஆதித்ய வர்மா -விமர்சனம்.
நடிகர்கள்;துருவ் விக்ரம்,பனிட்டா சந்து,ப்ரியா ஆனந்த்.
ஒளிப்பதிவு : ரவி. கே.சந்திரன்.
இசை; ரதன்.
இயக்கம்கிரிசாயா.
தமிழ் சினிமாவின் இன்னொரு வாரிசு வரவு துருவ் விக்ரம். இவர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஆதித்யா வர்மா’ படத்தை, ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் ஆவலுடன் எதிர்பார்த்தது. எப்படி இருக்கிறது?
ஒரு சில மாதங்களில் தன்னுடைய மருத்துவ படிப்பை முடித்துவிட்டு வெளியே செல்ல தயாராக இருப்பவர் துருவ் விக்ரம். கல்லூரிக்குள் ஜூனியராக உள்ளே வரும் பனிட்டா சந்துவை பார்த்தவுடன் துருவ் விக்ரமுக்கு மோகத்துடனான காதல் பிறக்கிறது.
அதன் பிறகு இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் திளைக்கிறார்கள். உதட்டுடன் உதடுகள் உரசிக்கொள்வதுடன், உடல்களும் உரசிக்கொள்ள.. ஒருவரை விட்டு ஒருவரை பிரியமுடியாத நெருக்கம் உருவாகிறது.
துருவ் விக்ரம், பனிட்டா சந்து இருவரின் காதல் விவகாரம் பனிட்டா சந்துவின் அப்பாவிற்கு தெரிய வரும்போது கடும் எதிர்ப்பை தெரிவிப்பதுடன் அவரை வேறு ஒருவருக்கு கல்யாணம் முடித்து வைக்கிறார்.
சில மாதங்கள் கடந்த நிலையில் நிறைமாத கர்ப்பினியாக இருக்கும் பனிட்டா சந்துவை சந்திக்கும் துருவ் விக்ரம், தன்னுடன் வருமாறு அவரை நிர்பந்திக்கிறார். என்ன நடந்தது என்பது தான் படத்தின் க்ளைமாக்ஸ்!
முதல் படத்திலேயே ஹெவியான கேரக்டரில் நடித்திருக்கும் துருவ் விக்ரம் அசால்ட்டாக நடித்திருக்கிறார். அவரது இந்த நடிப்பிற்கான முழு முதல் காரணம் ‘தேசிய விருது’ பெற்ற இயக்குனர் பாலா என்றால் அது மிகையல்ல என்பதே உண்மை! ( பாலா இயக்கத்தில் ‘வர்மா’ வெளியாகமல் போனது தனிக்கதை ).
தான் நினைப்பதும், அது போல் நடப்பதுமே சரி என்ற வெறித்தனமான ‘ஆதித்ய வர்மா’ கதாபாத்திரத்தில் மருத்துவ மாணவராகவும், அறுவை சிகிச்சை நிபுணராகவும் அசத்துகிறார்.
தன்னுடைய கம்பீரமான உடல், குரல் மூலம் முதல் படத்திலேயே பெண்களின் உள்ளம் கவர் நாயகனாகவும் அனைவருக்கும் பிடித்த நடிகராகவும் உருவெடுத்திருக்கிறார்.
விக்ரமுக்கு ஒரு ‘சேது’ என்றால் துருவ் விக்ரமுக்கு ‘ஆதித்யா வர்மா’. காதல் காட்சிகள், சண்டைக்காட்சிகள் என அனைத்துக் காட்சிகளிலும் தூள் கிளப்புகிறார்.
துருவ் விக்ரமின் ஜோடியாக பனிட்டா சந்து, படத்தின் ஆகப்பெரிய மைனஸ். அவர் மீது ஒரு ஈர்ப்பும் வரவில்லை…. க்ளைமாக்ஸில் அவர் மீது ஏற்படவேண்டிய பரிதாபம் துளிகூட இல்லை.
துருவ்வின் அப்பாவாக நடித்திருக்கும் ‘கடலோரக் கவிதைகள்’ ராஜா, நடிகையாக நடித்திருக்கும் பிரியா ஆனந்த், அவரது அண்ணனாக நடித்திருப்பவர், நண்பராக நடித்திருக்கும் அன்புதாசன், பாட்டி லீலா சாம்சன் என அனைவரும் அவரவர் வேலைகளை சரியாக செய்துள்ளனர்.
காட்சிகளை அழகாக படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரவி. கே.சந்திரன். ரதனின் பின்னணி இசையும் , பாடல்களும் பரவாயில்லை. துருவ் விக்ரம் எழுதி, பாடிய ‘எதற்கடி வலி தந்தாய்’ ‘இண்டர்நெட்’ இளைஞர்களின் ஃபேவரைட்!
முதல் பாதியில் படம் ஸ்லோவாக இருந்தாலும் துருவ் விக்ரமின் துரு, துரு அதை கொஞ்சம் சரி செய்கிறது.
தான் நேசிக்கும் மருத்துவத் தொழிலுக்கு மட்டுமே நேர்மையாக இருப்பார். மற்ற எதிலும் நேர்மையாக இருக்க மாட்டார் என்ற கதாபாத்திர வடிவமைப்பு முரண்.
வுமனைசர், ட்ரங்கர், செயின் ஸ்மோக்கர், கடுங் கோபக்காரர் என அடவடித்தனத்தின் மொத்த உருவமான ‘ஆதித்யா வர்மாவின்’ கதாபாத்திரத்தை புனித படுத்தியிருப்பது எதற்கு? சமூகத்தின் அவலங்களை தாங்கிப் பிடிப்பது ஏன்? என படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
எது எப்படியிருப்பினும் கோலிவுட்டில் தன்னுடைய வருகையினை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் துருவ் விக்ரம்.
வெல்கம் ஜூனியர் சியான்… பிடிங்க இந்த மலர் கொத்தை!
சினிமா முரசத்தின் மார்க் ; 3/5.