எழுத்து,இயக்கம் ; எம்.ஆர்.பாரதி, ஒளிப்பதிவு :ராஜேஷ் கே.நாயர் , இசை: அரவிந்த் சித்தார்த்.பாடல் :கவிப்பேரரசு வைரமுத்து,
பிரகாஷ் ராஜ் ,நாசர், ரேவதி ,அர்ச்சனா, ஈஸ்வரிராவ் , விஜய் கிருஷ்ணராஜ், மோகன்ராம் .
****************
அமரர் பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்கள் ஈஸ்வரிராவ், அர்ச்சனா.அவரது விசுவாசிகள்.
விசுவாசிகள் என்பதை இந்த காலத்தில் துரோகிகளும் சொல்லிக் கொள்வதால் பக்தைகள் என்றே சொல்லலாம்.
தோழமை மாநிலத்துக் கதை.தமிழ் மண்ணுக்கும் பொருந்திப் போகிறது.
பிரபல எழுத்தாளர் பிரகாஷ் ராஜ். சாகித்ய அகாடமி விருது கிடைக்கிறது. டெல்லிக்கு செல்லும் பிரகாஷ் ராஜ் விருதுடன் ஒரு நாள் முன்னதாகவே சென்னை திரும்புகிறார். வீட்டுக்குச் செல்வதற்குப் பதிலாக கல்லூரி காலத்து தோழி அர்ச்சனாவின் வீட்டுக்குச் செல்கிறார். 26 வருடங்களுக்குப்பிறகு அன்றுதான் முதல் தடவையாக சந்திக்கிறார் .அர்ச்சனா கணவனை இழந்து தனிமையில் வாழ்ந்தவர்.
அங்கு இரவில் நடந்தது என்ன, கல்லூரிக் காலத்து தூய நட்புக்கு பங்கம் வந்தது ஏன் ? ஊர் உலகம் தூற்றும் அளவுக்கு அர்ச்சனா களங்கப்பட்டது எதனால் ?குற்றவாளி யார், பிரகாஷ்ராஜா ,அர்ச்சனவா?இதுதான் கதை சுருக்கம்.
சோகத்தை சொற்கள் சுமந்து சொல்லி விடுகின்றன.. சுமைதாங்கிக் கல் இல்லாததால்! பளுவை இயக்குநர் குறைத்திருக்கலாம்.
எழுத்தாளர் அமரர் விந்தனைப் படிப்பது போல இருந்தது.
பிரகாஷ் ராஜ்,ரேவதி,அர்ச்சனா இவர்கள் இயல்பாக வாழ்ந்திருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ்,அர்ச்சனா தொடர்புடைய காட்சிகளே ஆதிக்கம் செலுத்துவதால் சற்று அயர்வு. இயல்பாக நடந்துவிட்ட ஒன்றினை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்கிற பிரசன்ஸ் ஆப் மைண்ட் கூட ஒரு ஆங்கில பேராசிரியைக்கு இருக்காதா? அவரது தனிமை வாழ்க்கை ஒரு பாடம் தானே! ஜஸ்ட் லைக் தட் ரேவதி வந்தார் ,அர்ச்சனாவுடன் பேசினார்.தெளிந்த மனமுடன் திரும்பிச் சென்றார். பாராட்டுக்குரிய காட்சி. பலருக்குப் பாடமும் கூட! இவருக்கு இருந்த மனத்தெளிவு அர்ச்சனாவுக்கு இல்லையே!
கவுன்சிலரை நாட்டு நடப்புக்காக கொண்டு வந்தார்களோ என்னவோ! வெட்டி வீசி இருக்கலாம்.
ஒளிப்பதிவு இசை இரண்டும் நேர்த்தி.
விருதுகள் பட்டியலில் சேரவேண்டிய படம்.