எழுத்து,இயக்கம் :கவுதம் வாசுதேவமேனன் .பாடல்கள் :தாமரை, இசை ;தர்புகா சிவா .
தனுஷ்,சசிகுமார்,மேகா ஆகாஷ்,செந்தில் ,வேல.ராமமூர்த்தி, செந்தில் வீராசாமி, சுனைனா, ராணா டகுபதி.( சிறப்புத் தோற்றம்.)
*********************
- விடியாத காலைகள் ,
- முடியாத மாலைகள்,
- வடியாத வேர்வைத் துளிகள்,
- பிரியாத போர்வை நொடிகள்.
படத்தில் இடம் பெறும் ‘மறு வார்த்தை பேசாதே”என்கிற பாடலில் இடம் பெற்ற சில வரிகள்தான் முதலில் நீங்கள் படித்தது. ‘போர்வை ‘என்கிற வார்த்தையை வைத்தே யார் எழுதியிருப்பார் என்பதை உங்களால் முடிவு செய்ய முடியும்.! அந்த வார்த்தைகளில் இருக்கும் வசீகரத்தை வைத்து இது இளைஞர்களுக்கான படம் என்பதையும், வாலிப வயோதிக அன்பர்களுக்கு ஒரு வகையில் வயாகராவாகவும் இருக்கலாம் எனவும் இறுதி செய்யலாம்.
மூன்றாண்டுகளை முழுசாக முழுங்கிவிட்டு வந்திருக்கிற படம். திரை உலக ஆபத்பாந்தவராக இருக்கிற ஐசரி கணேஷின் கருணைக்கண்கள் இயக்குனர் மீது பாய்ந்ததால் தோட்டா திரையில் பாய்ந்திருக்கிறது.
கவுதம் மேனனின் படம் என்றால் காதல் இருக்கும், காமம் தின்னுவதில் மென்மை இருக்கும்,வன்மம் இருக்கும் .இதிலும் எல்லாமே இருக்கிறது. இருந்தாலும் எங்கேயோ ஒரு தேக்கம்…
கதை இதுதான் .ஒரு தயாரிப்பாளர் எடுத்து வளர்க்கும் பெண்ணை நடிகையாக்கி அவள் வழியாக புகழுடன் கோடிகளை பெறலாம் என நினைக்கிறான் .அவன் ஒரு மாபியா.கொடூரன் .கூட்டிக் கொடுப்பதற்கும் தயங்காதவன் . இவனின் பிடிக்குள் அகப்பட்ட நடிகை மேகா ஆகாஷுக்கு நடிப்பதில் உடன்பாடில்லை. தப்பித்துப் போக தவிக்கும் இவருக்கு கல்லூரி மாணவன் தனுஷ் மீது காதல். முதல் பார்வையிலேயே! தனுஷுக்கும் பற்றிக் கொள்கிறது .
இடைவேளை வரை விசுவாமித்திரன்களையும் மோகத்தில் தள்ளும் வகையில் முத்தக்காட்சிகள் ஏராளம்,தாராளம். தனுஷ்,மேகா இருவருமே அனுபவித்து நடித்திருக்கிறார்கள். இவர்களின் காதல் இடைவேளைக்குப் பின்னர் ஓய்வெடுக்கப் போய் விடுகிறது. பள்ளி வயதில் காதலியை இழந்த அண்ணன் சசிகுமாரைத் தேடி தம்பி மும்பை போய் விடுகிறார்.அங்குதான் இலக்கு இல்லாமல் தனுஷையும் சசிகுமாரையும் நோக்கி பாய்கின்றன தோட்டாக்கள்.
ஏன் பாய்கின்றன,எதற்காக பாய்கின்றன ,காவல்துறை அதிகாரியான சசிகுமார் மீது மாபியாக்களும், சில அதிகாரிகளும் காட்டமுடன் இருப்பதற்கு எது காரணம் என்பதுதான் கதை. இரண்டு மணி முப்பது நிமிட நேரம் நாம் கடந்தாக வேண்டும்.
திரை உலகில் நடக்கிற சில அசிங்கங்களை சொல்வதற்கு கவுதம் தயங்கவில்லை.நடிகையை நிர்வாணப் படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவது, பிற மாநில சூப்பர் ஸ்டார்களுக்கு கூட்டிக் கொடுத்து ஆதாயம் பார்ப்பது போன்ற திரை மறைவு வேலைகளை தைரியமாக சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
தனுஷின் தொடக்க காட்சிகள் சில நிமிடங்கள் குரல் வழிகாட்சியாக கடத்தப்படுகிறது. வயிற்றை நோக்கிப் பாய்கிற தோட்டாவை பெல்ட் பக்கிள் தடுக்கிறது. இடைவேளைக்குப் பின்னர் இதை போல அண்ணன் சசிகுமார் கொடுத்த சாவி காப்பாற்றுகிறது.
மேகா ஆகாஷ் காதலை ரசித்து செய்திருக்கிறார் . அதை தனுஷும் அனுபவிக்கிறார்.தயாரிப்பாளராக வருகிற அந்த புண்ணியவான் முகத்தில் தான் எவ்வளவு கொடூரம்.சூப்பர்.! யாரை பிரதிபலித்திருக்கிறாரோ?
சசிகுமார் வருகிற கால அளவு குறைவாக இருந்தாலும் நிறைவுடன் செய்திருக்கிறார் நேர்த்தி.
இயக்குநரின் வசனம் பலம்.தற்புகா சிவாவின் இசையில் தாமரையின் ‘மறு வார்த்தை பேசாதே ‘ சுகம்.
எடிட்டர் கத்தரிக்கோலை பயன்படுத்தக் கூடாது என விரதம் எதுவும் இருந்தாரா என்பது தெரியவில்லை.
பிற்பாதியில் சுனைனாவுக்கு என்ன வேலை ,சசிகுமாருக்கு என்ன உறவு …இப்படி உப்பு சப்பில்லாத சந்தேகம் என ஒதுக்கி விடமுடியாதபடி காட்சிகள் அதிகம்.
சினிமா முரசத்தின் மார்க் .3 / 5