எழுத்து இயக்கம் : ஸ்ரீ செந்தில்,ஒளிப்பதிவு :சுரேஷ் பாலா, இசை : விஷால் சந்திரசேகர் .
பரத் , ஆன் ஷீத்தல் ,சுரேஷ்சந்திரா மேனன்,ஆதவ் கண்ணதாசன், பிரியதர்ஷினி, அம்மு.
************
வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போகும் உண்மையான பக்தர்களுக்கு சுவாமி தெரிவார். கலர் பார்க்க வருகிற பக்தாஸ்க்கு சுடிதார் பொண்ணுகள் தெரிவார்கள். பிரசாத விரும்பிகளுக்கு ஆலயத்தில் அன்று வழங்கப்படும் தொன்னை அயிட்டங்களில் ஒன்று பிடிக்கும். சிறப்பாக சொல்லவேண்டுமென்றால் பெருமாள் கோவில் பிரசாதத்தில் சிறிது சுவை கூடி இருக்கும்.
நேற்று வெளியான வெள்ளிக்கிழமைப் படங்களில் காளிதாஸ் சிறிது வித்தியாசமாக இருந்தது. கிரைம் திரில்லர். உளவியல் சார்ந்தது. அதை எப்படி சொல்ல வேண்டும் என்கிற உத்தியில் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இன்னும் கூடுதலாக யோசித்திருக்கலாமோ என்கிற எண்ணம் வராமல் இல்லை.
நீலத்திமிங்கலம் விளையாட்டை ஜாடையாக காட்டி அடுத்தடுத்து மூன்று பெண்கள் மொட்டை மாடியில் இருந்து விழுந்து சாகிறார்கள்.நான்காவது ஒரு பெண் கத்திக்குத்துக்கு இரையாகிறாள் . இவை கொலையா ,தற்கொலையா ?தேடிக்கண்டுபிடிக்கிறது போலீஸ்.இதுதான் காளிதாசின் கதை.
டைட்டில் பழமையாக இருப்பதினாலேயோ என்னவோ …என்னத்த சொல்லப் போறாய்ங்க என்கிற ஆர்வமின்மை இருப்பது நிஜம்.
காளிதாசாக பரத். இன்ஸ்பெக்டருக்கு உரிய உடல் கட்டு,கம்பீரம் இருக்கிறது. இந்தப் படம் தனக்கு ரீ-என்ட்ரியாக அமையவேண்டும் என்கிற அக்கறை நடிப்பில் இருக்கிறது. மனிதர் கடுமையாக உழைத்திருக்கிறார். இவரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியுமா என்கிற சந்தேகத்தில் மேலிடம் துப்பறியும் கில்லாடி என சொல்லப்படும் சுரேஷ் சந்திரா மேனனை நுழைக் கிறது.அவர் காரில் பறக்கிறார். சிகரெட்டாய் புகைத்துத் தள்ளுகிறார். இருவரும் சேர்ந்து எப்பய்யா கண்டு பிடிக்கப்போறாங்க என்கிற சலிப்பு வராமல் இல்லை.
கடைசியில் எல்லா கொலைகளுக்கும் காரணம் காளிதாசின் மனைவி அனு ஷீத்தல்தான் என்பதை கிளைமாக்ஸ் நெருக்கத்தில் அவிழ்க்கும்போதுதான் விறுவிறுப்பு தொற்றுகிறது.
பரத்-அனு இவர்களது அருமைக் குழந்தை இறந்த பிறகு இருவருக்குமே வலி தான். கூடுதலாக தாய்க்கு !.
அவளது துக்கம்,ஏக்கம்,ஏமாற்றம் இவையெல்லாம் மனதில் சூறாவளியாக உருவெடுக்கிறது. ஆறுதலும் தேறுதலுமாக இருக்க வேண்டிய கணவன் தனித்துப் போவதால் ,அல்லது தவிர்ப்பதால் அவளது மனதில் உருவாகிற போலி பிம்பம் கொலைகளுக்கு காரணமாக இருக்கிறது. இதைத்தான் கிளைமாக்சில் கண்டுபிடிக்கிறார்கள்.
அனு ஷீத்தல் சிறப்பாக நடித்திருக்கிறார். கடுமையான கேரக்டர்.அவரது மனதில் கருவாகிய போலி பிம்பம் அவரை எப்படியெல்லாம் படுத்தி எடுக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறார். அவர் ஒரு மனநோயாளி என்பதை வெளிப்படுத்திய பாங்கு இயக்குநருக்கு பாராட்டு சொல்ல வைக்கிறது.
சுரேஷ்பாலாவின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம்.
ஆனாலும் சலிப்புதான் மிஞ்சுகிறது.