எழுத்து இயக்கம் : சுசீந்திரன் ,ஒளிப்பதிவு :சுஜித் சாரங் ,இசை :அருள் கரோலி.
விஷ்வா ,மிருணாளினி,மனோஜ் பாரதிராஜா, நரேன்,வாசவி
*************
வழக்கமான வடசென்னை,புட்பால் விளையாட்டு ,சுசீந்திரன் இயக்கம் என்றதும் அவ்வளவாக கதையில் ஈர்ப்பு இருக்காது என்றுதான் தோன்றும். கென்னடி கிளப், வெண்ணிலா கபடிக் குழு 2 ஆகிய இரண்டு படங்கள் சுசீந்திரனுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லாததால் இந்தப்படமும் அந்த வகையில் கலந்து விடுமோ என்கிற எண்ணம் வருகிறது.
ஆனால் அறிமுக நடிகர் விஷ்வா,’கைதி ‘புகழ் நரேன், மற்றும் வித்தியாசமான வடசென்னை என ,நமக்கு சற்று ஆறுதல். மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என தோன்றுகிறது. ஆர்.கே.சுரேஷின் சகோதரி மகன்தான் படத்தின் நாயகன்.
பள்ளியில் சிறந்த புட்பால் பிளேயர் விஷ்வா, ஆனால் அதை முற்றிலுமாக வெறுக்கிற அம்மா. திறமையாக விளையாடும் மாணவனை நேஷனல் லெவலுக்கு கொண்டு போக ஆசைப்படும் கோச் நரேன். இவர்கள் மூவருக்கும் மொத்தமாக கத்தியை சொருக காத்திருக்கிற ஸ்டண்ட் சிவா.கதையை நகர்த்துபவர்கள் இந்த நால்வர்தான். காதல் என்பது பட்டும் படாமலும் விட்டும் விலகாமலும் வந்து போகிறது.
வரிசையாக புட்பால் தொடர்பான படங்கள். ஏழுபேர் விளையாடும் ஆபத்தான உதை பந்து.என கலவையான கதை. வித்தியாசமாக எதை சொல்ல முடியும்? ஓரளவுக்கு மிகவும் சோதிக்காமல் சொல்லியிருக்கிறார்.ஊகிக்க முடிகிற அளவுக்கு திரைக்கதை அமைந்தது பலவீனம்.
இதுவரை பார்த்த திரைப்பட கால்பந்து விளையாட்டு வீரர்களில் விஷ்வா அசலாக தெரிகிறார். துடிப்பான நடிப்பு. நல்ல கதை அமைந்தால் இவரும் கோலிவுட்டின் நாயகனே.!
நரேனுக்கு நல்ல நேரம் ,கைதியை தொடர்ந்து இதிலும் சரியான கேரக்டர். ஒரு விளையாட்டு வீரனை அநியாயமாக இழந்து விடக்கூடாது என்கிற அக்கறை கவலை ..வெல்டன் நரேன்.!
மனோஜ் பாரதிராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். அநியாயமாக சாகடித்திருக்கிறார்கள். இவ்வளவுக்கும் வில்லனுக்கு கை பாணமாகத்தான் இருக்கிறார். சாகடிப்பதற்கு இயக்குனர் சொல்லுகிற காரணம் மலிவானது. ஆனாலும் மனோஜ் சிறப்பாகவே நடித்து நன்றாகவே செத்து நடித்திருக்கிறார்.
ஸ்டண்ட் மாஸ்டர் சிவா தேர்வு கச்சிதம். காதலுக்கென வந்து போகிற மிருணாளினி சிறப்பான தேர்வு.
காதலை சொல்லுகிறேன் என கருமாந்திரத்தை காட்டவில்லை சுசீ.
சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவை ரசிக்கவிடாமல் படக் படக் கென கத்திரி போட்டிருப்பவர் எடிட்டர்.
சாம்பியனை சிபாரிசு பண்ண முடியவில்லை.
சினிமா முரசத்தின் மார்க். 2 /5