நாக்கு இருக்கிறதே என்பதற்காக நச்சுப் பொருளை ருசி பார்க்க முடியாது.
அப்படியொரு நிலைமை தற்போது இந்தியாவில்.!
குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து அதை நிறைவேற்றத் தொடங்கி இருக்கிறது பாஜக அரசு.
அண்டைநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள் உட்பட மற்ற மதத்தை சேர்ந்தவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.ஆனால் இந்த சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் முஸ்லீம்கள் ஆகியோருக்கு உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. 

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.பாகிஸ்தானின் இந்துவுக்கு வழங்கப்படும் உரிமை,இலங்கையின் இந்துவுக்கு ஏன் வழங்கப்படவில்லை என்கிற எதிர்ப்பு தற்போது தமிழகத்திலும் வலுத்து வருகிறது. தமிழகத்திலும் போராட்டங்கள் பரவி வருகிறது.
இந்நிலையில் சட்ட திருத்தம் குறித்துமக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் உள்ளிட்ட திரையுலகைச் சார்ந்தவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
.அதாவது,” இந்தியாவை மதச்சாற்ற நாடாக நீடிக்க வைப்போம். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு மறுப்பு சொல்வோம். அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு ‘நோ’ சொல்வோம். இந்த பூமி எவனுக்கும், அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது” என்று கூறியிருந்தார்.
அவரது கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை தனது டுவிட்டரில் கடுமையாக சாடியிருக்கிறார் நாடக,சினிமா நடிகர் எஸ்.வி.சேகர்,இவர் பாஜக வை சேர்ந்தவர். அவர் எதிர்க்கவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.
.’படித்த முட்டாளின் பார்வை தவறானால் நம் தாய் நாடு இவர்களை போன்றவர்களால் அழிவை நோக்கி செல்லும். அதை அனுமதிக்க முடியாது’ என காட்டமாக கூறியிருக்கிறார்.
இந்தியா இவருக்கு மட்டும் சொந்த நாடு இல்லையே.! இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது அவர்கள் தமிழர்கள் என்பதால்தானே! அவர்களுக்கு பூர்வீகம் தமிழ்நாடுதான்.
இதை பற்றி எஸ்.வி.சேகர் வாயைத் திறக்காமல் இருப்பது எதனால் என்பது தெரியவில்லை என்பதாக திரை உலகில் பேசிக்கொள்கிறார்கள்.