Uppu Karuvaadu
Rating :
(3/ 5)
Directed by :Radha Mohan
Casting :Karunakaran ,Nandita ,Elango Kumaravel,M.S.Bhaskar,Mayisamy
Music :Steeve Vatz
Produced by :First Copy Pictures
Review
சினிமாவிலிருந்து கொண்டு அதை கிண்டல் செய்து படமெடுக்கும் இயக்குனர்களில் முதன்மையானவர் ராதாமோகன்.இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘உப்பு கருவாடு’, படத்தை ஃபர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்திருப்பவர் ராம்ஜி நரசிம்மன். கோடம்பாக்கத்து கிரகநிலைப்படி சினிமாவில் சினிமா எடுப்பது மாதிரி படம் எடுத்தால் ஓடாது என்பது ஒரு கூற்று. அதை ரா.பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ உடைத்தது. பண்பான இயக்குனர் என்று பெயரெடுத்த ராதாமோகன் உடைப்பாரா?
வெற்றி பெற துடிக்கும் இயக்குனர் கருணாகரனின் முதல் படம் ஃப்ளாப்! இரண்டாவது படம் பாதியில் டிராப்! இப்படி இக்கட்டான சூழ்நிலைக்குப் பிறகு கிடைத்த மூனாவது படமும் முதல் நாளே பனால் ஆகுது. ஏன் என்பதே இப்படம்.
தயாரிப்பாளர் கிடைக்காமல் தேடி அலையும் கருணாகரனுக்கு மேனேஜர் மயில் சாமியின் உதவியால் ஒரு கன்டீஷனோடு கிடைக்கிறது வாய்ப்பு. என்னவென்றால் மீன் வியாபாரம் செய்துவரும் எம்.எஸ்.பாஸ்கரின் ஒரே செல்ல மகளான ‘அரை மென்டல்’ நந்திதாவை ஹீரோயினாக நடிக்க வைக்கவேண்டும் என்பதுதான். அரைமென்டல் நந்திதாவை நடிக்கவைக்க படாத பாடுபடுகிறது கருணாகரன் & கோ. அத்துடன் உதவி இயக்குனாராக வந்துசேரும் காரியக்கார அரைமென்டல் ‘டவுட்’ செந்திலும் சேர்ந்து கொண்டு படுத்துகிறார்.
கருணாகரன் & கோ குழுவினர் படப்பிடிப்புக்கு தயாராகும் போது நடக்கும் பிரச்சனைகளை காமெடியாக சொல்ல முயன்று மொக்கை காமெடியை மொத்தமாக வாரி வழங்கியிருக்கிறார்கள். இருந்தாலும் மயில்சாமியும், ‘டவுட்’ செந்திலும் அவ்வப்போது சிரிக்க வைத்து ஆறுதல் படுத்துகிறார்கள். அதிலும் திடீரென வந்து மலையாள பாடல் பாடும் சினிமா பைத்தியம் வெடிச்சிரிப்பு ஏற்படுத்துகிறார். தயாரிப்பாளராக வரும் மீன் வியாபாரி எம்.எஸ்.பாஸ்கர் சிறப்பு. ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் முளைக்கும் வில்லங்க வீராசாமிகளை வெளுத்திருக்கிறார்கள்.
கருணாகரனுக்கும், ரஷிதாவிற்கும் இடையே இருக்கும் ஆழமான நட்புடன் கூடிய காதல் அழகு. காதலை வெளிப்படையாக சொல்லிக்கொள்ளாமல் பேசிக்கொள்ளும் இவர்களுடைய காட்சிகளை அதிக படித்தியிருந்தால் படத்தை எல்லோரும் ரசித்திருப்பார்கள். சினிமாவைச் சுற்றியே கதையிருப்பதால் சினிமாதெரியாதவர்களுக்கு நிச்சயமாக பிடிக்காது.
முதல் அரை மணி நேரப்படத்தில் எழுந்து ஓடிவிடலாமா என்னும் மனநிலைக்கு தள்ளப்படும் ரசிகர்களுக்கு அதன்பின்பு சற்றே ஆறுதல். இப்படம் ஓடினால் அதற்கு ஒரே காரணம் வசனம் எழுதிய பொன்.பார்த்திபன் தான். வலிமையான வார்த்தைகளால் வசப்படுத்தி விடுகிறார். அங்கங்கே இடம்பெற்ற ராதாமோகனின் வழக்கமான (மொக்கை) வசனங்களும் உண்டு எழுதியது யாரோ? தினிக்கப்பட்ட தங்கையின் கல்யாண செலவு சென்டிமென்ட். என அலுப்பு ஏற்படுத்தும் காட்சிகள் சோர்வை தருகிறது.
ஸ்டீவ் வாட்ஸ் இசையில் பாடல்கள் ‘ஜீரோ’ வாட்ஸ்! காட்சிப்பதிவில் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியின் கவனமின்மை தெரிகிறது. மொக்கை காமெடிகளை ரசிக்கும் ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்கும். யூகிக்க முடியும் ப்ரி க்ளைமாக்ஸ். யூகிக்கமுடியாத க்ளைமாக்ஸ் கொடுத்த ராதாமோகனுக்கு சபாஷ் சொல்லலாம்.
பாக்ஸ் ஆஃபிஸை பொறுத்தவரை ‘மழையில கருவாட காயவச்சு காவலுக்கு ரெண்டால போட்ட மாதிரி!