“எந்த ஒரு பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. தேச பாதுகாப்பு, நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு இந்திய மக்கள் ஒன்றாக இருக்க வேண்டும்”என்பதாக ஒரு பொதுவான கருத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொல்லியிருந்தார்.
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் நடக்கிற போராட்டம் பற்றிய கருத்துதான் அது.
அந்த மசோதாவைப் பற்றி அவர் கருத்து சொல்லாமல் போராட்டம் பற்றி மட்டுமே சொல்லியிருந்தார்.போலீசாரின் அத்து மீறிய அடக்கு முறை வெறியாட்டம் பற்றி மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்திருந்தார். குறிப்பாக தமிழ் ஈழத் தமிழர்களின் நிலை குறித்து கவலை பட்டிருந்தார்.
ஆக தமிழகத்தின் இரண்டு பெரிய சூப்பர் ஸ்டார்கள் தங்கள் நிலைப்பாட்டை இப்படியாக தெரிவித்திருந்த நிலையில் பாலிவுட்டின் பிரபல படத்தயாரிப்பாளர் முகேஷ் பட் தனது கருத்தினை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். அதில் ரஜினிகாந்த் வெளியிட்டிருந்த கருத்துக்கு மாறான தனது கருத்தினையும் பதிவு செய்திருக்கிறார்.
“இன்று நாடே பற்றி எரிகிறது. கண்ணீர் விடுகிறது. புதிய குடியுரிமை சட்டத்துக்கு தேசம் முழுவதும் எதிர்ப்பு இருக்கிறது. இதை எதையும் பார்க்கவில்லை என்றால் துரதிருஷ்டம்தான் !
எனது தனிப்பட்ட கருத்து அந்த குடியுரிமை திருத்த சட்டம் தேவையற்றது என்பதுதான்..அதிர்ந்து போயிருக்கிறேன்.
பிள்ளைகள் தெருவுக்கு வந்து போராடுகிறார்கள் என்றால் சம்திங் ராங் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
வன்முறைக்கு எதிரானவன் நான்.ஆனால் ஏன் போராடுகிறார்கள் என்பதை பற்றி அரசாங்கம் யோசித்துப் பார்த்திருக்க வேண்டாமா?
அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை.அதான் போராட்டம்!” என்பதாக சொல்லியிருக்கிறார்.
பர்கான் அக்தர்,ஸ்வர பாஸ்கர்,ராகுல் போஸ் .ஹுமா குரேஷி ஆகிய பாலிவுட் பிரபலங்களும் அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.