எழுத்து, இயக்கம் : ஹலிதா ஷமீம் ,இசை :பிரதீப் குமார் ,ஒளிப்பதிவு :அபிநந்தன் ராமானுஜம் ,மனோஜ் பரமஹம்சா ,விஜய் கார்த்திக் கண்ணன்,யாமினி யக்ஞமூர்த்தி ,
சமுத்திரக்கனி,சுனைனா ,மணிகண்டன்,நிவேதிதா சதிஷ் ,லீலா சாம்சன்,சாரா அர்ஜூன் ,கிராவ் மகா ஸ்ரீராம் ,ராகுல்,
*************
பனைவெல்லம்,சுக்கு,மல்லி,இஞ்சி கலந்த சின்ன சின்ன அச்சுகள் தான் சில்லுக் கருப்பட்டி. பேமஸ் உடன்குடி சில்லுக் கருப்பட்டிதான். இதன் பெயரில் சினிமாவா?
அதிலும் சூர்யாவின் லேபிளில்.!
அப்படியானால் அது மாமூலான கதையாக இருக்காது.சத்தியமா வித்தியாசமான கதையாகத்தான் இருக்கும் . நினைத்தது பொய்யாகவில்லை.
எதிர்பார்ப்புக்கும் மேலாக இருந்தது. நான்கு கதைகள்.ஒவ்வொன்றும் வேறு வேறு களம் .உணர்வுகள் என்பது அகநிலை அனுபவம்.உணர்ச்சி என்பது புலன்களின் தூண்டுதல். உணர்வு,உணர்ச்சி இவைகளின் வித்தியாசமான அனுபவங்களை இரண்டு மணி நேரத்தில் கடக்க முடிகிறது.
அடித்தட்டு மக்களிடம் இருந்து முதல் கதை.
குப்பை மேடுகளும் அதை கிளறுவதில் கிடைக்கும் பொருள்களும்தான் ஓய்வு நேர வேலை என வாழ்கிற மாஞ்சா ( ராகுல்.) என்கிற மாணவன். இவனும் சரி இவனைச் சேர்ந்த ஏனைய சிறுவர்களும் வழக்கமான சினிமா கேரக்டர்களாக இல்லை. அவனுக்கு கிடைத்தற்கரிய ஒரு மோதிரம் குப்பையில் கிடைக்கிறது. அதை உரிய பெண்ணிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற எண்ணம் ..அதற்காக அவன் படும் பாடு என கதையை கொண்டு போயிருக்கிறார் இயக்குநர். சேரி வாழ் மக்கள் தங்களின் சின்ன ஆசையைக் கூட தூக்கி வீசப்பட்ட ஒரு ஷாம்பூ பாட்டில் வழியாகவே நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்.வறுமையின் உச்சம் என்பதை பல இடங்களில் வெளிக் காட்டியிருக்கிறார்கள்.
ஒரு மீம் கிரியேட்டரின் கதை இரண்டாவதாக.!
முகிலன் என்கிற கேரக்டரை எங்கே கேன்சருக்கு பலி கொடுத்துவிடுவாரோ என்கிற பதட்டம் நமக்கு. ஆனால் அதற்கும் தீர்வு இருக்கிறது என்பதை இயல்பான காதல் வழியாக காட்டியிருக்கிறார் இயக்குநர் .முகிலன்,மது என்கிற கேரக்டர்களில் மணிகண்டன்,நிவேதிதா இருவரும் தேர்ந்த நடிகர்களையும் தாண்டி இருக்கிறார்கள். வாடகைக் காரில் மெதுவாக வளர்கிற உண்மையான அன்பு காதலாக மாறுவதற்கு கேன்சர்தான் உதவுகிறது. லொக்கேஷன் தேர்வு சூப்பர்.
அடுத்து இதுவும் சாத்தியமே என முதியோர்களிடம் முகிழ்க்கும் அன்பு.லீலா சாம்சன், (யசோதா.) கிரவ்மகா ஸ்ரீ தரன் (நவநீதன் ) .வாலிபம் கடந்து வயோதிகம் நடக்கிறது. திருமணம் இல்லை. தனித்த வாழ்க்கை. இவர் யசோதா. கல்யாணம் நடந்து மனைவியை இழந்து வாழ்கிற ஸ்ரீ தரன் .
கடற்கரை காதலர்கள் தமை மறந்து கிஸ் பண்ணிக்கொள்வதை சுட்டிக்காட்டி நாமும் அந்த மாதிரியா என நவநீதன் கேட்க முகம் சுளிக்கிற யசோதா வெறுத்து ஒதுங்கினாலும் அன்புக்காக ஏங்குகிறது மனம். அற்புதமான கேரக்டர்கள். சூப்பர் !
தனபால் ( சமுத்திரக்கனி ) அமுதினி (சுனைனா ) இவர்களின் கதையை முத்தாய்ப்பாக வைத்திருக்கிறார் ஹலிதா. எப்படியோ மூன்று பிள்ளைகளை பெற்று விட்டார்கள்.ஆனாலும் அவர்களிருவரும் இரு வேறு பார்வையில்.! செக்ஸ்தான் தனபாலுக்கு தூக்க மருந்து. எல்லா சுமைகளும் அமுதினியின் தோள்களில்.! முரண்படுகிறார்கள். அமுதினியின் ஹேர் ஸ்டைலை பாராட்டுகிற ஸ்கூல் வேன் டிரைவருக்கு இருக்கிறஅந்த ரசனை கூட புருஷன் தனபாலுக்கு இல்லையே என்கிற வருத்தம் அவளுக்கு. அது தொடர்பாக இருவரும் போடும் சண்டையை ரசிக்காதவர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் ஊடலுக்கும் கூடலுக்கும் தகுதியற்றவர்கள் என உச்சந்தலையில் அடிக்கலாம்.
அறிவுரை சொல்லிப்போகிற சமுத்திரக்கனியை ஒரு கணவனாக மாற்றி காட்டிய படக்குழுவுக்கு நன்றிகள் ஆயிரம்! மிஸ்டர் கனி, உங்களிடம் இதை போல எத்தனையோ மாற்றங்களை தமிழ்நாடு எதிர்பார்க்கிறது. சும்மா சொல்லக்கூடாது சுனைனாவை.! வெத்து ஆர்ப்பாட்டம் நடிப்பாகாது என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார். அல்லது நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.
அகம் தானா என்கிற பாடல் ..ரசிக்க முடிகிறது.
சில்லுக்கருப்பட்டி நம்ம ஊரு சரக்குங்க.! மருந்து மாதிரி.!
குடும்பத்துடன் பார்க்க முடியலியே என்கிற வருத்தமுள்ள குடும்பத்தினரும், மெய்யான காதலை பார்க்க முடியவில்லையே என்கிற இளவட்டங்களும் பார்க்க வேண்டிய படம்.
மார்க்குகளுக்கு அப்பாற்பட்ட படம். பாடமும் கூட.!