புரட்சி கலைஞர் சரத்குமார். திரை உலகம் மட்டுமல்ல அரசியல் வட்டமும் நன்கு தெரிந்த பிரபலம்தான்.!
பல மொழிகள் பேசக்கூடியவர். மனதில் ஒன்றும் வெளியில் வேறுமாக பேசத் தெரியாதவர்.
சமத்துவ மக்கள் கட்சி என்கிற அரசியல் இயக்கத்தின் தலைவர்.
அண்மையில் இவரை சந்தித்தபோது…..
பலமுனைத் தாக்குதல் எனச் சொல்லலாம் .அத்தனையையும் எதிர்கொண்டார்.
தமிழகத்தில் இன்றும் பேசப் படுகிற,விவாதிக்கப்படுகிற ஒரு பிரச்னை “தமிழகத்தை யார் ஆளவேண்டியது , தமிழனா ,அல்லது வேற்று மாநிலத்தவனா?”
உயிரோட்டமான கேள்வி. ஏக இந்திய அரசியல் வாதிகள்,மாநில அரசியல்வாதிகள் ,மத்திய அரசின் பதவிகளில் நாட்டம் கொண்ட தலைவர்கள் என பலரும் அவ்வப்போது சந்திக்கிற கேள்வி.
“ஆள வேண்டியவர் தமிழரா,அல்லது தமிழர் அல்லாதவர்களா??”
முகத்தில் அறைந்தது மாதிரி வந்தது பதில்.!
“மராட்டியத்தைச் சேர்ந்த உத்தவ் தாக்கரேயிடம் இதை போன்ற கேள்வியை கேட்டுப்பாருங்களேன்.! மராட்டியத்தை யார் ஆளவேண்டும் என்பதற்கு அவர் என்ன சொன்னார்.!
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று சொல்லிச்சொல்லியே….? தமிழனுக்கு ஆளத் தெரியாதா? அதனாலதான் வந்தாரை வாழவைக்கிறோமா? நமக்கு ஆளுகிற திறமை இல்லையா? பிற மாநிலங்களில் தமிழனுக்கு எந்த மாதிரியான வரவேற்பு இருக்கிறது?
சினிமாவையே எடுத்துக்கோங்க…எத்தனை தமிழ்நடிகர்கள் பிற மாநிலங்களில் ஜெயிக்க முடிகிறது? ரசிக்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் அந்தந்த மாநில மொழிப் படங்களில் முக்கிய வேடங்களில் முன்னணி நடிகர்களாக நமது தமிழ் நடிகர்கள் இருக்கிறார்களா?
பழசி ராஜா என்கிற படத்தில் சரத்குமாருக்கு வாய்ப்பு. சரி.! தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார்களா? ஏன் கொடுக்கல? சரத்குமாருக்கு நடிக்கத் தெரியல !அதனாலதான் கொடுக்கலன்னு சொல்லமுடியுமா…சரி அப்படியாவது சொல்லிட்டு விட்டிருக்கலாம். தமிழ்நாட்டில்தான் ‘வந்தாரை வாழவைக்கும்’ மனப்போக்கு.! நம்ம வீடு. நாம்பதான் நம்ம சொந்த வீட்டில் வாழனும் என்கிற எண்ணம் வரணும்!”
அழுத்தம் திருத்தமான பதில்.!
“:அடுத்த கேள்வி…நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா?”
“வந்தா என்ன…ஆனா அரசியலுக்கு வந்தால் தனக்கு முதலமைச்சர் நாற்காலிதான் வேண்டும் என்கிற நோக்கத்துடன் வருவது பற்றித்தான் சந்தேகமாக இருக்கு. அரசியல்னா பதவி மட்டும்தானா? சும்மா சொல்லிட்டே இருக்கக்கூடாது பாஸ். வருவதாக இருந்தால் வந்துவிடவேண்டியதுதான்!”
“மோடியின் அரசாங்கத்தின் குடியுரிமை திருத்த மசோதாவில் தமிழீழத் தமிழர்களை புறக்கணித்ததை எப்படி எடுத்துக் கொள்வது?”
“அதைப்பற்றித்தான் அரசாங்கம் விளக்கம் சொல்லிவிட்டதே…!அவர்களை புறக்கணிக்கமுடியாது என்று நான் நம்புகிறேன். இந்த சட்டத் திருத்த மசோதாவை எதிர்ப்பவர்கள் முதலில் சட்டத்தை முழுமையாக படியுங்கள் என்பதுதான் என் கோரிக்கை. வன்முறையைத் தூண்டுவது மட்டுமே நோக்கமாக இருக்கக்கூடாது.”
“நடிகர் சங்கம் இன்னும் கட்டப்படாமல் இருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
“நான் என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிறீங்க? மிகவும் வருத்தமாக இருக்கு. ஒற்றுமை இல்ல.நடிகர் சங்க வரலாற்றில் தனி அதிகாரி நியமனம் என்பது இதுதான் முதல் முறை. சீக்கிரமாக அந்த கட்டடம் கட்டி முடிக்க வேண்டும் என்பது ஆசை.எத்தனையோ கல்யாணங்கள் அங்க நடக்க வேண்டியதிருக்கு. நானும் ராதாரவியும் எத்தனையோ நன்மைகள் செய்திருக்கிறோம்.ஆனால் சரத்தை ஒழித்து கட்டணும் என்கிற முனைப்புதான் இருந்தது.
விஷாலை சரத்குமார் தாக்கிட்டார்னு மீடியாவை வைத்து பொய்யான அவதூறு கிளப்பினாங்க. அதை வைத்து அடிதடி வரை போனதே.! சரத்,ராதாரவிக்கு எதிராக மீடியாக்களில் தவறான செய்திகள் வந்தன. இப்ப ஏன் வரல? “
“நீங்க,திருமதி ராதிகா சரத்,மகள் வரலட்சுமி சேர்ந்து நடிக்கிற ‘பிறந்தாள் பராசக்தி ‘படத்தைப் பற்றி ?”
“அந்த படத்தை ரேடான் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரியில் படப்பிடிப்புத் தொடங்கிவிடும். இந்த இடத்தில் ஒன்றை உங்களிடம் பதிவு செய்ய விரும்புகிறேன். ஒரு தந்தையாக ஒரு மகளுக்கு செய்ய வேண்டிய கடமையை நான் செய்யவில்லை. அதற்காக என் மகள் வரலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
வரலட்சுமிக்கு நடிப்பில் ஆர்வம் என்பது தெரிந்திருந்தும்,அவர் தனது திறமையை நிரூபித்த பிறகும் அவரின் திரை உலக உயர்வுக்கு நான் எதுவும் செய்யவில்லை. அந்த குற்ற உணர்ச்சி எனக்கு இருக்கிறது. அதற்காக அவரிடம் உங்களின் வழியாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். .மன்னித்து விடு மகளே!” என்று சொன்னபோது மனதளவில் அவர் எந்த அளவுக்கு வருந்துகிறார் என்பது தெரிந்தது.