எழுத்து இயக்கம் :பாவெல் நவகீதன். ஒளிப்பதிவு :கிருஷ்ண சேகர் ,எடிட்டர் :பிரேம் குமார் , இசை : ரோன்னி ரபேல் .
ராம் அருண் கேஸ்ட்ரோ .விஷ்ணு பிரியா பிள்ளை, லிஜேஷ் ,காயத்ரி ,மைம் கோபி.
***************
இது ஒரு திரில்லர் மூவி.
நட்டநடு நிசி என்பதை போல ஆள்,அரவம் அற்ற சாலை. ஒரு ஆட்டோ கூட காணப்படவில்லை. ஒரு பெண் பயந்து பயந்து நடந்து செல்கிறாள். பின்னால் ஓர் ஆள் தொடர்கிறான் என்கிற உணர்வு. அவள் கழுத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வைகுண்டமோ,சிவலோகமோ ஏதோ ஒரு இடம் போய் சேர்ந்து விட்டாள் .
அவள் யார் என்பதுதான் ஃ போரன்சிக் டிபார்ட்மென்டுக்கு தலையைப் பிய்த்துக் கொள்கிற வேலையாக இருக்கிறது. யார் யார் மீதோ சந்தேகம் வருகிறது. போலீஸ் புத்தி. ஆனால் அந்தப் பெண்ணின் அப்பாதான் அந்த கொலையை செய்தவர் என்பதை கிளைமாக்சில் கண்டுபிடிக்கிற போது கடுமையான அதிர்வு.
அதிலும் உயர் சாதியைச் சேர்ந்த தன்னுடைய மகளின் உடலில் வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவனின் ரத்தம் கலக்கலாமா ,அதனால்தான் கொன்னேன் என அந்த உயர் சாதியைச் சேர்ந்த அப்பா சொல்கிற போது நம்மை சுனாமி தூக்கியதைப் போல உணர்வு.
கதை தாழ்ந்த சாதி -உயர் சாதி சம்பந்தமானதுதான் என்பதை இயக்குனர் பாவெல் நவகீதன் ஜாடையாக காட்டியிருப்பது கதை முடிவில்தான் தெரியும். ஜெய் பீம் அநாதை இல்லம், பெரியார் படம் என செட் பிராப்பர்ட்டிகளை கதையின் ஓட்டத்தில் கடந்து போய்விடுவோம். அற்புதமான இயக்கம். பா.ரஞ்சித்திடம் இருந்தவர்.சில படங்களிலும் நடித்திருப்பவர் பாவெல்.
நாயகர்களை படைக்கிறபோது அவர்களுக்கு சில குறைபாடுகளை வைத்து விடுவது தமிழ்ச்சினிமாவின் போஃபியா . அதை வைத்து சில காட்சிகளை வைத்து விடுவார்கள். இந்த படத்தின் போலீஸ் அதிகாரிக்கு இருட்டைக்கண்டால் பயம் ,மயக்கம். அதனால் ஃ பாரன்சிக் டிபார்ட்மென்ட்டுக்கு மாற்றல். இதுவரை எந்த இயக்குநரும் இந்த துறைக்கு இம்பார்ட்டன்ட்ஸ் கொடுத்தது இல்லை. நல்ல முயற்சி. ஸ்கிரீன் பிளே தடுமாறுவதை உணரச்செய்யாமல் காப்பாற்றுவது அந்த டிபார்ட்மெண்டும் எடிட்டிங்கும்தான்.! வெல்டன் எடிட்டர் சி.எஸ்.பிரேம்குமார்.
ஹீரோ காஸ்ட்ரோவுக்கு வாய்ப்புகள் வரலாம்.
மப்டியில் இருந்தாலும் போலீசுக்கு உரித்தான மிடுக்கு ,மிரட்டல்,துணிச்சலுடன் விஷ்ணு பிரியா பிள்ளை. சொந்தக்குரலா,டப்பிங்கா என தெரியவில்லை. சில பிழைகள் .
சாதி வெறியை நாயடி பேயடி என அடித்திருக்கிறார்கள்.
சினிமா முரசத்தின் மார்க்ஸ். 2.5 / 5