இரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகியிருக்கிற படம்தான் ‘டோலா’ ! இந்த படத்தின் வெளியீட்டு விழாவில் திரை உலக பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.
தயாரிப்பாளர் டாக்டர் ஷாம் குமார் பேசும்போது,தன்னை காலை வாரி விட்டவர்களையும் துரோகிகளையும் முதலில் நினைவு கூர்ந்து நன்றி சொன்னது ஆச்சரியமாக இருந்தது.
” ஊக்குவிக்க முடியவில்லையென்றாலும் தட்டி விடாமலாவது இருங்கள். . ஒரு ஜிம் பாயாக வந்தவன் இன்று தயாரிப்பாளராக நிற்கிறேன். அதுதான் சினிமா. சினிமாவை நேசியுங்கள், அதேபோல் குடும்பத்திலுள்ளவர்களையும் நேசியுங்கள். நான் இந்த நிலைக்கு வருவதற்கு என் குடும்பமும் ஒரு காரணம். ஒரு நல்ல படம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்துதான் இப்படத்தை எடுத்தேன். இப்படத்திற்குப் பிறகு ‘ரகுடு’ என்ற கேங்ஸ்டர் படம் அதிகப் பொருட்செலவில் எடுக்கவிருக்கிறோம்” என்றார்.
கதாநாயகன் ரிஷி ரித்விக் பேசுகையில் ” இயக்குநர் மற்றும் அனைவரின் கடுமையான உழைப்பால் 10 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். சினிமாத் துறையில் வித்தியாசமாகவும், சிறப்பாகவும் செய்தால் தான் நிலைத்து நிற்க முடியும்.”என்றார் .
“இசையமைப்பாளர் அணில் மற்றும் மணி பேசும்போது “இப்படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து இசையமைத்திருக்கிறோம். ஹாரர் திரில்லர் படம் என்பதால் எந்த இடத்திற்கு என்ன மாதிரியான இசையைக் கொடுக்க வேண்டுமென்று ஆலோசித்து செய்திருக்கிறோம்” என்றார்.
கதாநாயகி பிரேர்னா, மற்றும் கே.ராஜன் ‘ஜாகுவார்’ தங்கம் இயக்குநர் கஸ்தூரி ராஜா,சரண்ராஜ் ,பாக்யராஜ் ஆகியோரும் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
இயக்குநர் ஆதிசந்திரன் பேசும்போது, “இப்படத்தைப் பற்றி பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கின்றது. நான் ஏகலைவன் போல் இயக்குநர் பாக்யராஜிடம் இயக்கத்தைக் கற்றுக் கொண்டேன். பொதுவாக நான் பாடல்களிலும், இசையிலும் தலையிடுவேன். என் விருப்பத்திற்கேற்றாற்போல் இசையமைத்துக் கொடுத்த அணில் மற்றும் மணி இருவருக்கும் நன்றி. ஒளிப்பதிவாளரைப் பற்றி காட்சிகளே கூறும். தயாரிப்பாளர் ஷாம் நல்ல மனிதர்” என்றார்.
‘டோலா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் நிறைவாக ‘டோலா’ படத்தின் இசைத் தகடு வெளியிடப்பட்டது. அதன்பின்பு ஜோக்கர்ஸ் கிரியேஷன்ஸ்-ன் இரண்டாவது தயாரிப்பான ‘ரகுடு’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது.