1986 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் ,இசை இளவல் கங்கை அமரன் இருவரையும் சந்திக்க வைத்து பேச வைத்ததில் அவர்கள் பொதுவாக பேசிக்கொண்டதை நேற்று படித்தீர்கள் .
அவை அனைத்தும் அந்தக் காலத்துக்குரியவைகளாக இருந்தன. கால மாற்றங்களுக்கு ஏற்ப நிகழ்வுகளுக்கு தகுந்த மாதிரி கருத்துக்களும் மாறும்.
ஆனால் நட்பு மாறுவதில்லை. முரண்பட்டாலும் அந்த நட்பு மட்டும் உள்ளத்தின் ஆழத்தில் கம்பீரமுடன் படுத்திருக்கும். பலன்களை எதிர்பாராத நண்பர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
அத்தகைய நண்பர்கள்தான் உலகநாயகன் கமல்ஹாசன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும்….
கங்கை அமரனிடம் கமல் என்ன சொன்னார் ?
கமல் : நானும் ரஜினியும் என்னவெல்லாம் பேசிக்கிறோம்,சண்டைப் போட்டுக்கிறோம் ,அப்படி, இப்பிடின்னு எல்லாம் சொல்றாங்க. ஆனால் நானும் அவரும் சந்திச்சு பேசும்போது “என்னங்க இப்படி நடந்திடுச்சி.எத்தனை நாட்களா இப்படி ?தூத்துக்குடியில் நம்ம ரசிகர்களுக்குள்ள தகராறு ஆகிப்போச்சே.,அது சரியில்லையே” இப்படி நாங்க ஒருத்தருக்கொருத்தர் பேசிக்குவோம்..
அவரும் என்னிடம் “என்ன கமல், ‘விக்ரம் ‘படத்துக்கு எவ்வளவு செலவாச்சு? ..எனக்கு ‘மாவீரன் ‘ படத்தில இப்படி எல்லாம் சிக்கல் …அதில் நான் இந்த மாதிரி தப்பிச்சேன்.அடுத்த படம் நீங்க பண்ணும்போது இந்த சைடு பாத்துக்குங்க “என்று ஒருத்தருக்கொருத்தர் பரஸ்பரம் அட்வைஸ் பண்ணிக்குவோம்.
நான் யாரையெல்லாம் போட்டு எடுக்கிறேன் என்பதை அவரும் பாத்துக்குவார்.. “நான் அதே டைரக்டரை போட்டுடலாம்னு இருக்கேன் .என்ன சொல்றீங்க “ன்னு யோசனை கேப்பார்.
இரண்டு பேரும் கடும் போட்டியாளர்களாக இருப்போம்.அது ஆரோக்கியமான போட்டி. அவர் ஒன்னு எடுத்தால் நான் ஒன்னு எடுத்துக் காட்டுறேன்.அவர் ‘மாவீரன்’ எடுத்தது கூட அதனால் இருக்கலாம். எப்படியாவது ‘மாவீரன் ‘ரிலீஸ் ஆகிவிடக்கூடாதுன்னு நானும் சொல்லப் போறதில்ல. ரஜினியும் ‘விக்ரம் ‘ படத்தை எப்படியாவது உரு தெரியாமல் அழித்து விடுறேன்னு சொன்னது கிடையாது.
விக்ரம் நல்லா வந்திருக்கான்னு ரஜினியும் விசாரிப்பார். மாவீரன் நல்லா வந்திருக்கான்னு நானும் விசாரிப்பேன். இப்படி நான் ரஜினி பத்தி சொல்றேன். ரஜினி மாதிரி ஒரு பலமான சக ஆட்டக்காரர் இல்லேன்னா எனக்கு எப்படி திறமையா போட்டி போடத்தோணும்?”
உண்மைதானே!