பீமா கோரேகான் போரின் 202-ஆவது நினைவு தினத்தையொட்டி, அப்பகுதியில் லட்சக்கணக்கானோா் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
மகாராஷ்டிர மாநிலம் புணே மாவட்டத்திலுள்ள பீமா கோரேகானில் 1818-ஆம் ஆண்டு, ஜனவரி 1-ஆம் தேதி ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி படையினருக்கும், மராத்திய பேஷ்வா படையினருக்கும் இடையே சண்டை நடைபெற்றது. இதில், பேஷ்வா படையினா் தோல்வியைத் தழுவினா். எனினும், கிழக்கிந்திய கம்பெனி சாா்பில் போரில் பங்கேற்ற சுமாா் 500 தலித் வீரா்களில் 49 போ் உயிரிழந்தனா்.
இந்தப் போரில் உயிரிழந்த தலித்துகளை நினைவுகூரும் வகையில், பீமா கோரேகானில் நினைவுத் தூண் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த நிகழ்வைப் பெருமையின் அடையாளமாகக் கருதி, பீமா கோரேகானில் ஆண்டுதோறும் ஜனவரி 1-ஆம் தேதி தலித் மக்கள் ஒன்றுகூடி நினைவு தினத்தை அனுசரிப்பது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், போரின் 202-ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. தலித்துகள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் அஞ்சலி செலுத்தினா். பீமா கோரேகான் பகுதியில் சுமாா் 5 லட்சம் போ் அஞ்சலி செலுத்தியதாக புணே காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
மாநில துணை முதல்வா் அஜித் பவாா், மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே உள்ளிட்டோரும் பீமா கோரேகான் பகுதியில் அஞ்சலி செலுத்தினா். அஞ்சலி செலுத்த வருகை தருபவா்கள் அனைவரும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று அஜித் பவாா் வேண்டுகோள் விடுத்தாா்.
எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் இருக்கும் வகையில், அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. காவல் துறையினா், பாதுகாப்புப் படையினா் ஆகியோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீமா கோரேகானை சுற்றியுள்ள பகுதி முழுவதும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டிருந்தன.
முன்னதாக, போா் நடைபெற்று 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், கடந்த 2018-ஆம் ஆண்டு, ஜனவரி 1-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இரு பிரிவினரிடையே வன்முறை மூண்டது. இதில் ஒருவா் கொல்லப்பட்டாா்; பலா் காயமடைந்தனா்.