தமிழகத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள “பீப் சாங்” குறித்து நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர் கொடுத்துள்ள புகாரிலிருந்து.. நான் பிரபல திரைப்படக் கலைஞர். பல படங்களில் நடித்துள்ளேன். எனது மகன் சிம்பு என்கிற எஸ்டிஆர். அவரும் முன்னணி நடிகர். பல படங்களில் நடித்துள்ளார். மேலும் பெரும் புகழும், பெரும் திரளான ரசிகர்களையும் கொண்டுள்ளார். நடிப்பு தவிர பாடல்களைப் பாடுவதிலும், பாடல்களைப் பாடி பதிவு செய்வதிலும், ஆல்பங்களை உருவாக்குவதிலும் ஈடுபட்டுள்ளார். எனது மகன் தற்போது ஊரில் இல்லை. எனவே அவர் சார்பில், அவரது அறிவுறுத்தலின் பேரில் இந்தப் புகாரை அளிக்கிறேன். யூடியூப் மற்றும் வாட்ஸ்ஆப்பில் தரவேற்றப்பட்டுள்ள இசை வடிவம் பெரும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் தருகிறது. அது டம்மியான வார்த்தைகளைக் கொண்டு போடப்பட்ட ஒரு ரஃப் பாடலாகும். முழுமையான, முறையான பாடலாக அது இல்லை. வரிகளும் இல்லை. அந்தப் பாடலுக்கான இசையை அமைத்தவர் இசையமைப்பாளர் அனிருத். முழுமையாக முடிக்கப்படாத, சாதாரணமான முறையில் போடப்பட்ட பாடல் இசை அது. அதை பின்னர் அனிருத் கைவிட்டு விட்டார். இந்த இசையும், பாடலும் எந்தப் படத்திலும் பயன்படுத்தப்படவில்லை. ஆல்பத்திலும் பயன்படுத்தப்படவில்லை. மேலும் இதை எனது மகனோ அல்லது இசையமைப்பாளர் அனிருத்தோ அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. மேலும் இந்த இசையில் தேவையில்லாமல் இடைச் செறுகல் வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதை எனது மகன் சேர்க்கவில்லை, ஆல்பத்திற்கான இயக்குநரும் சேர்க்கவில்லை. திரைத் துறையைச் சேர்ந்த அல்லது இசைத் துறையைச் சேர்ந்த விஷம குணம் படைத்த மூன்றாவது நபர் யாரோ சிலர்தான் இந்த இசை, பாடலைத் திருடி அதை திருத்தி, திரித்து சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர் என்று உறுதியாக நம்புகிறேன். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் டி.ராஜேந்தர்.