சென்னை தியாகராய நகர், இந்தி பிரசார சபாவில் அகரம் அறக்கட்டளை நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் இரண்டு நூல்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் . கே.ஏ. செங்கோட்டையன் வெளியிட்டார்.
பேராசிரியர் ச. மாடசாமி எழுதிய ‘வித்தியாசம்தான் அழகு’ மற்றும் கிராமப்புறங்களில் படித்து முதல் தலைமுறை பட்டதாரி ஆன மாணவர்கள் எழுதிய அனுபவங்களின் தொகுப்பான ‘உலகம் பிறந்தது நமக்காக’ ஆகிய இரண்டு நூல்களை செங்கோட்டையன் வெளியிட்டார்.
அமைச்சர் பேசுகையில் ” இனி 3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச வாரம் ஒரு நாள் 45 நிமிடம் பயிற்சி அளிக்கப்படும்”என்றார். (நல்ல முயற்சி .தாய் மொழியான தமிழையும் பிழையின்றி எழுத பேச பயிற்சி அளிக்கலாமே !)
12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வாரத்தில் வரும் விடுமுறை நாட்களில் அவர்கள் சுற்றுபுறத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பயிற்சி அளிக்கப்படும்”என்கிற முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அகரம் அறக்கட்டளை நிறுவனர் நடிகர் சூர்யா பேசும்போது அகரத்தின் சாதனைகளை எடுத்து சொன்னார். .
“அகரம் பத்தாண்டுகளில் 3000 மாணவர்களை படிக்க வைத்திருக்கிறது. இதன் பின்னணியில் எண்ணற்ற தன்னார்வலர்களின் உழைப்பு இருக்கிறது. எண்ணற்ற நன்கொடையாளர்களின் பங்கேற்பு இருக்கிறது. சமூக அக்கறையுடன் கல்வி வாய்ப்பு அளித்த கல்வி நிறுவனங்கள இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் முன்னாள் அரசு பள்ளி மாணவர்களை இணைத்து அவர்கள் படித்த பள்ளிகளின் மேம்பாட்டிற்க்கு அகரம் அறக்கட்டளை “இணை” எனும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.
இதற்கான முயற்சிக்கு அரசு பள்ளி சார்பில் முழு ஒத்துழைப்பு தரப்படும் என்று கூறிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு அகரம் அறக்கட்டளை சார்பான எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
எந்த ஒரு தன்னார்வ அறக்கட்டளைக்கும் எந்த வித தொய்வுமின்றி சீராக நடைபெற நிதி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அகரம் அறக்கட்டளைக்கு இன்று ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்த ராம்ராஜ் காட்டன் . நாகராஜ்க்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று வெளியான இந்த இரு புத்தகங்களும் தனித்தன்மை வாய்ந்தது, அகரம் இந்த இரு புத்தகங்களையும் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது.
எந்த ஒரு சூழ் நிலையையும் புரிந்து கொள்வதற்கும், சிறப்பாக செயல்படுவதற்க்கும் கல்வி முக்கிய பங்கு வகிக்கின்றது. “அகரம்” மூலம் என் தம்பி தங்கைகளுக்கு கல்வியுதவி அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் .நாம் அனைவரும் தான் “அகரம்”.” என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாணவி தனது துயரங்களை கண்ணீர் மல்க சொன்னபோது சூர்யா கண் கலங்கி விட்டார்.
அவரால் இருக்கையில் அமைதியாக உட்கார முடியவில்லை. கலங்கிய கண்களுடன் எழுந்து சென்று அந்த மாணவியை தேற்றினார். இரக்கமுள்ள இதயம் ,அந்த ஏழைப்பெண்ணின் துயரக்கதையை தாங்காமல் துடித்து அழுதது. மேடையில் இருந்தவர்கள் அத்தனை பெரும் கலங்கி விட்டார்கள்.பார்வையாளர்களில் பலர் கண்ணீர் விட்டதையும் காண முடிந்தது.