எழுத்து ,இயக்கம் :ஏஆர் .முருகதாஸ் ,ஒளிப்பதிவு :சந்தோஷ் சிவன் ,இசை : அனிருத் .தயாரிப்பு ,லைகா சுபாஷ்கரன் .
ரஜினிகாந்த்,நயன்தாரா ,நிவேதா தாமஸ் ,சுனில் ஷெட்டி ,யோகிபாபு ,பிரதிக் பப்பார்,ரவி கிஷன் .
*************
80 களின் சூப்பர் ஸ்டார் ரஜினியை காட்டவேண்டும் என்கிற ஆசை ரொம்பவே முருகதாஸுக்கு.!
அந்த காலத்தில் ரஜினி படம் என்றாலே ஸ்டைல்தான் முதலிடம். கதையும் இருக்கும். நடிப்பில் காமெடியும் கலந்து கட்டி அடிக்கும்.
அந்த ரஜினிக்கு கதை பண்ணுகிறேன் என்று ரஜினியை ஜிம்முக்கு அனுப்பி எக்ஸர்சைஸ் எல்லாம் பண்ண வைத்து ‘தர்பார்’ நடத்தியிருக்கிறார்கள் . யூத் ரஜினி.
மும்பையில் போலீசை சரமாரியாகப் போட்டுத்தள்ளுகிறான் ஹரி பிரசாத் .பெரும் அளவில் போலீசுக்கு சேதம். ஒடுக்குவதற்கு ஆதித்ய அருணாசலத்தை மும்பை நகர கமிஷனராக அரசு அனுப்பி வைக்கிறது.சிட்டியை தனது பயங்கரவாதத்தினாலும் ,கொக்கைன் போதைக்கு அடிமையாகிவிட்ட மிதப்பினாலும் திரியும் ஹரிபிரசாத்தை ஆதித்ய அருணாசலம் என்ன செய்தார்,வெற்றி பெற்றாரா என்பதை இரண்டரை மணி நேரத்தில் சொல்லி முடிக்கிறார் முருகதாஸ்.இந்த அடித்தளத்தை வைத்துக்கொண்டு தர்பார் நடத்தி இருப்பவர் ரஜினி.
ஆதித்ய அருணாசலம்தான் ரஜினிகாந்த். இவரது மகளாக நிவேதா தாமஸ். மகளுக்கு மாப்பிள்ளை தேடுகிறார் ரஜினி. அம்மாவை இழந்து அப்பாவின் அரவணைப்பில் வாழ்ந்த மகள் நிபந்தனை விதிக்கிறார்.”நீங்களும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்” என்பதாக.!
சரி நயன்தாராவுக்கு ஜோடி சேர்ந்தாச்சு என்று நினைத்தால் ஏமாற்றம்தான்.! ஸ்ரீமன் உருவத்தில் தடையாகி விடுகிறது. இரண்டு பாடலுடன் ரஜினி -நயன் எபிசோட் குளோஸ். ரஜினியின் அந்தக் காலத்து ஸ்பிரிங் ஸ்டைல் படம் முழுவதும் நிரம்பி இருக்கிறது. மகளின் மரணம் அவரை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறது என்பது கடைசி காட்சிகளில் தடதடக்கிறது.
ரஜினிக்கு உதவியாளராக வருகிற யோகிபாபு வழக்கமான ஒன் லைனர்களில் தியேட்டரில் வாழ்கிறார். நயன்தாராவை விட இவருக்குத்தான் காட்சிகள் அதிகம்.பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.
நயன்,நிவேதா தாமஸ் இருவரில் கேரக்டரை வாழவைத்திருப்பவர் நிவேதாதாமஸ்தான்.! தனது மரணம் விரைவில் என்பது தெரிந்ததும் கலங்குகிற காட்சியை உதாரணமாக சொல்லலாம். ஆனால் மூளையில் இன்னின்ன பாதிப்புகள் என பட்டியலிடும் டாக்டர் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளாமல் “நீ சாகத்தான் போறே??”என்கிற ரீதியில் பேசிக் கொண்டு இருப்பது ..சிரிப்பு சார்!
கொக்கைன் போதையின் பிடியில் பெரிய இடத்துப் பிள்ளைகள் மாட்டுவது வழக்கமான ஒன்று. இதில் மந்திரியின் மகளே சிக்குகிறார். வசனங்களில் அதிகமாக அரசியல் இருக்கும் என எதிர்பார்த்தால் ‘சிறையில் சின்னம்மா’வை மட்டும் தொட்டு விட்டு பேனாவை மூடிக்கொண்டிருக்கிறார் முருகதாஸ்.
பாடல்களில் அந்த காலத்து மெட்டுகள் .இருந்தாலும்’கிழி’க்கு ரசிகர்கள் ஆடுகிறார்கள் என்றால் அதற்கு சூப்பர் ஸ்டார் தான் காரணம்.
இயக்குநர் முருகதாஸை காப்பாற்றி இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
.இனிப்பு இருக்கிறது .அது சர்க்கரைப் பொங்கலா,கற்கண்டு பொங்கலாஎன்பதை படம்பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்.