சமுதாய சிந்தனை சற்றேனும் இல்லாதவர் அல்லர் இயக்குநர் ,எழுத்தாளர் ஏஆர் முருகதாஸ்.
அவரது ரமணா…நேற்றைய சர்க்கார் , முந்தைய கத்தி,7 ஆம் அறிவு ,துப்பாக்கி, கஜினி ஆகிய படங்களில் இழிந்துபோன சமுதாயத்தின் முகம் தெரிந்தது. அதற்கு காரணமானவர்களை அடையாளம் காட்டியது. பேனாவின் வலிமையை காட்டினார் அந்த குள்ள மனிதர். இது உருவ கேலி இல்லை.உயரமான மனிதர்களிடம் இல்லாத தைரியம் அந்த மனிதரிடம் இருந்ததே !.
சர்க்காரில் அவர் அரசியல் அவலங்களை அலசியிருந்தார். மிகப்பெரிய மனிதர்களின் இருட்டுப் பக்கத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
தளபதி விஜய் மீது அரசியல்வாதிகளுக்கு இருந்த பயம், முருகதாசின் வசனங்களால் அதிகமாகியது. எங்கே தங்களின் அந்தரங்கத் தேரின் அச்சாணிகளை கழற்றி விடுவார்களோ என்கிற அச்சம் உச்சி மண்டையில் வியர்த்தது.
அதன் எதிரொலிதான் சில வழக்குகள்,அரசின் நடவடிக்கைகள். ஆடிப்போனது அரசு!
. அவரது அடுத்த படத்தில் மேலும் பல நாட்டு நடப்புகளை அலசுவார் என எதிர்பார்த்தார்கள்.
விரைவில் அரசியலுக்கு வரப்போவதாக சொல்லி வருகிற சூப்பர் ஸ்டார் ரஜினியின் வழியாக அவை வெளிப்படும் என கை தட்ட காத்திருந்தார்கள்.
தேங்கிக்கிடக்கும் தண்ணீரில்தான் பாசி படரும் . பயம் பதுங்கும் மனதில்தான் அச்சம் வேர் விடும் .
சர்க்காரில் வந்த மிரட்டல் தர்பாரில் எதிரொலிக்கிறதா?
அரசுக்கு எதிராக எழுதுங்கள் என யாரும் சொல்லவில்லை.அது அரசியல் கட்சிகளின் வேலை.
சமுதாய சீர்கேடுகளை சுட்டிக் காட்டி குட்ட வேண்டியது முருகதாஸ் போன்ற கலைஞர்களின் கடமை.அது குறைந்து விட்டதே இயக்குநரே !
நிர்பந்தங்கள் ஏதேனும் தொட்டுப்பார்த்ததா? வேணாம் அரசியல் விட்டு விடுங்கள் என எவரேனும் உபதேசித்தார்களா?
காணவில்லை முருகதாஸை!