“சூர்யாவின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார் என்ற தகவலை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு உறுதி செய்த நிலையில் படத்தின் பெயரை வெற்றிமாறன் அறிவித்துள்ளார்.
என்.ஜி.கே,காப்பான் படங்களைத் தொடர்ந்து சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள புதிய படம் சூரரை போற்று. விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியது. அதேசமயம் அசுரன் படத்தை தொடர்ந்து விஜய், சூர்யாவுடன் வெற்றிமாறன் இணைகிறார் எனவும் கூறப்பட்டது. இதற்கிடையே நகைச்சுவை நடிகர் சூரியை வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தை இயக்குகிறார் என்றும் அறிவிப்பு வெளியானது.
இதன் காரணமாக சூர்யா மற்றும் விஜயுடன் வெற்றிமாறன் இணையும் தகவல் உறுதிப்படுத்தப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில்,சூர்யாவின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார் என்பதை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன் தன்னுடைய இயக்கத்தில் சூர்யா நடிப்பதாகவும் அப்படத்திற்கு ‘வாடிவாசல்’ என பெயரிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுடன் தொடர்புடைய ‘வாடிவாசல்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதால் இந்தப்படத்துக்கு தமிழக ரசிகர்ளிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆடுகளம் படத்தில் சேவல் சண்டையை வைத்தே அந்த அளவுக்கு தெறிக்கவிட்ட வெற்றிமாறன் தற்போது ‘வாடிவாசல்’ என்ற தலைப்பில் ஜல்லிக்கட்டு கதையை மையப்படுத்தி படம் எடுத்தால் அதன் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்கிறார்கள்.