எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் அதை சிறப்புடன் இணைந்த பிரமாதமாக ,பிரமாண்டமாக கொண்டாடிவிடுவார் கலைப்புலி எஸ்.தாணு. அவரது தயாரிப்பான அசுரன் 100 நாளை கடந்து ஓடியது .
வெற்றி விழாவை அசுரத்தனமாகவே கொண்டாடிவிட்டார் கலைப்புலி.
புலிக்கு என்றுமே தோல்வி இல்லை.
விழாவில் தனுஷ், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், டீஜே அருணாச்சலம் , அம்மு அபிராமி , கென் கருணாஸ் ,ஜிவி.பிரகாஷ் , ராமர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காகவே நெல்லையில் இருந்து வந்திருந்தார் தனுஷ்.
அவர் பேசியதாவது,
“இது மறக்க முடியாத நிகழ்ச்சி . இது நன்றி சொல்கின்ற மேடை..தாணு சாருக்கு என் நன்றி. வெற்றிமாறனுக்கும் எனக்கும் அவர் கொடுத்த சுதந்திரம் தான் அசுரன் உருவெடுத்ததிற்கு காரணம். ஜிவிக்கு என்னுடைய நன்றி. இந்தபடத்தின் பின்னணி இசையில் தான் படத்தின் 25% சதவிகிதம் இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் உழைப்பு மிகவும் பெரிது. என் உடன் சேர்ந்த நடித்த நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றி.
அது ஒரு கனாக்காலம் சூட்டிங்ல ஒரு காட்சி நடிக்கணும். வெற்றிமாறனை பண்ணச் சொல்லுங்க..அதைப்பார்த்து நடிக்கிறேன் என்று சொன்னேன். உடனே வெற்றி கையில் இருந்த பேடைப் போட்டு பிரமாதமாக நடித்துக் காட்டினார். நான் அதன்பிறகு நடித்தேன். அன்றில் இருந்து இன்றுவரை நானும் வெற்றியும் சகோதரராக இருந்து வருகிறோம்.
சிவசாமி கதாபாத்திரத்தை என்னை வைத்து இயக்க முடியும் என்று முடிவு செய்த வெற்றிமாறனுக்கு நன்றி. இந்தப்படம் ரிலீஸாகும் போது நான் ஊரில் இல்லை. எனக்கு ரிசல்ட் என்னனு தெரியல..கஷ்டமா இருந்தது. அப்ப தான் எனது அம்மா தொலைபேசியில் தொடர்புகொண்டு பெரிய வெற்றி அடையும் என சொல்கிறார்கள் என சொன்னார் ..ஆனால் நீ தூரமா இருக்கியேப்பா அப்படினு சொன்னாங்க..அப்ப தான் நான் சொன்னேன்..வெற்றி என் பக்கத்திலேயேதான் இருக்கும்மான்னு “நான் வெற்றிமாறனைச் சொன்னேன்..இது எல்லோருக்குமான வெற்றி. வெற்றிமாறன் மாதிரி ஓரிருவர் இருந்தால் போதும்..நமக்கு எல்லாம் நல்லாகவே முடியும்.” என்றார்.
இயக்குநர் வெற்றி மாறனின் பேச்சு இனி….
“படம் தயாராகி வெளி வருவதற்குக்குள் நிறைய மிஸ் அண்டெர்ஸாண்ட்டிங் இருக்கும். அதையெல்லாம் தாண்டி இந்தப்படம் 100 நாள் ஓடி இருக்கிறது. ஒரு படம் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளும். அதற்கான ஸ்பேஸை மட்டும் நாம் கொடுத்தால் போதும். ஒரு படத்தின் கமர்சியல் சக்ஸஸ் என்பது விபத்து தான். நாம் அதற்காக உழைத்தால் மட்டும் போதும்.
நிறைய பேர் எனக்கு பிரஷர் தரப்பட்டராகச் சொன்னார்கள். ஆனால் அப்படி அல்ல. இந்தப்படத்தின் கமர்சியல் சக்ஸஸுக்கு பத்திரிகையாளர்கள் பெரும் காரணம். எனக்கு ரொம்ப கோபம் வரும். அதையெல்லாம் உதவி இயக்குநர்கள் மேல் காட்டுவேன். அவங்களுக்கு நன்றி. என்னோட இயலாமையை தான் உங்களிடம் கோபமாகக் காட்டுவேன் என்று உதவி இயக்குநர்களிடம் சொல்லிக் கொள்கிறேன்.
தனுஷ் எல்லாப்படத்தில் இருந்தும் இந்தப்படத்தில் ஒருபடி மேல் தான். இந்தப்படத்திற்கு அவர் கொடுத்த கமிட்மெண்ட் ரொம்ப அதிகம். எமோஷ்னலா ஒரு விசயத்தை கேரி பண்றதுலாம் ரொம்ப பெருசு. இந்த கதாபாத்திரத்தை அவர் பண்ணியதால் தான் இவ்வளவு சிறப்பா வந்திருக்கிறது . தாணு சார் ஆரம்பத்தில் இருந்தே நல்ல கூலாக மெயிண்டெண்ட் செய்தார். பிரகாஷ்ராஜ் சார் சொன்ன நேரத்தில் சரியாக வருவார். கேமராமேன் வேல்ராஜ் நான் என்ன நினைக்கிறேனோ அதை எடுத்துக் கொடுப்பார். ஜிவி கொடுத்த எனர்ஜி கமர்சியல் சக்ஸஸுக்கு முக்கியக் காரணம்” என்றார்.
அடுத்து பேசியவர் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு .இன்ப நாளிது இனிய நாளிது எனபேசத் தொடங்குவது அவரது வழக்கம். வெற்றிமாறன் ,தனுஷ் இருவரையும் வெகுவாக பாராட்டிப் பேசினார்.சில புதிய தகவல்களையும் சொன்னார் .இனி அவரது உரை :
“மேடையில் வீற்றிருக்கும் அத்தனை கலைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் எம் வணக்கம். தம்பி தனுஷ் வேலையில்லா பட்டதாரி படம் சமயத்தில் வெற்றிமாறனுடன் படம் பண்ணலாம் என்று சொன்னார். அந்தக் காலத்தில் இருந்தே நாங்கள் நல்ல பழக்கம்.
.எஸ்.பி முத்துராமனுக்கு பிறகு என் மனதை கொள்ளை கொண்டவர் வெற்றிமாறன். இந்த படத்தில் வெற்றிமாறன் உழைத்த உழைப்பு ஒவ்வொரு நாளும் என்னை வியக்க வைத்தது. சில காட்சிகளை வெற்றிமாறன் போட்டுக்காட்டும் போதெல்லாம் இது பெரிய வெற்றி அடையும் என்று நம்பினேன் .
ரிலீஸ் தேதி அறிவித்ததும் வெற்றிமாறன் பதட்டம் ஆனார். என் கண்கள் பனிக்கும் நன்றியை வெற்றிமாறனுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கும் தனுஷுக்குமான தொடர்பை வலுப்படுத்தியது தம்பி அன்புச்செழியன். சிவாஜி சாருக்குப் பிறகு தனுஷின் நடிப்பு பிரம்பிக்க வைக்கிறது. கேரளாவில் படம் பார்த்த அத்தனை பெரிய நடிகர்களும் ஒரே வார்த்தையில்” தனுஷை தவிர யாராலும் இப்படத்தில் நடிக்க முடியாது” என்றார்கள். நடிகர் திலகத்திற்குப் பிறகு தனுஷ் தான்.
ரஜினியிடம் நான் இந்தப்புள்ள நமக்கு கிடைத்த பொக்கிசம் என்றேன். அவரும் தனுஷ் கால்களில் விழும் சீனில் நானே நடிக்கலாமா என்று நினைத்தேன்” என சொன்னதாக தாணு கூறினார்.