சினிமா நடிகைக்கு வாத்தியாராக இருப்பதென்றால் கட்டையில போகிற ஸ்டேஜில் இருக்கிற கிழங்களும் பல் செட்டு மாட்டிக் கொள்ளும் என சும்மாவா சொன்னார்கள்.
யோகா சாமியாருக்கு அப்படியொரு ஆசை வந்திருக்கிறது.! பாபா ராமதேவ் ஊரறிந்த சாமியார்.பொதுவாக எல்லா சாமியார்களுமே பாஜகவின் அனுதாபிகளாகவே இருப்பார்கள்.இவர் மட்டும் விதி விலக்கா என்ன?
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிற குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.முகமூடி அணிந்த வெளிஆட்கள் உள்ளே புகுந்து மாணவ மாணவியரை கண்மூடித்தனமாக தாக்கியதில் கடுமையான காயங்கள் மாணவர்களுக்கு.!
இந்த வன்முறையைக் கண்டித்து மாணவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக நடிகை தீபிகா படுகோனே அந்த பல்கலைக்கழகத்துக்கு சென்று மாணவ மாணவியரை சந்தித்து ஆறுதல் சொன்னார்.இதனால் தீபிகா நடித்து வெளியான சப்பக் படத்தை புறக்கணிக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் சொல்லி வருகிற நேரத்தில்தான் ராமதேவ் அட்வைஸ் பண்ணியிருக்கிறார்.
“தீபிகா படுகோனே நடிகையாக இருக்கலாம்.அதே நேரத்தில் இந்தியாவின் கலாசாரம், அரசியல் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.அவர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது.இந்த மாதிரியான உணர்வுப்பூர்வமான பிரச்னைகளில் என்னை போன்றவர்களிடம் ஆலோசனை செய்திருக்க வேண்டும்.அவருக்கு வழி காட்டியிருப்பேன் ” என்கிறார்.