பிரபல பின்னணிப் பாடகர் ஜேசுதாஸ். அற்புதமான பாடகர்.தமிழ்,மலையாளம் ,இந்தி என எல்லா மொழிகளிலும் பாடியிருக்கிறார். இசையை முறைப்படி கற்ற சங்கீத மேதை. இவர் கிருத்துவராக இருந்தாலும் இவர் பாடிய அய்யப்ப பாடல்தான் சபரிமலையில் ஒலிபரப்பாகிறது .இவரது மகன் விஜய ஜேசுதாஸ் .இவரும் திரைப்படங்களில் பாடி வருகிறார்.
இவரது மனைவி பிரபா. காதல் திருமணம்தான்.மற்றவர்களை போல பீச்.சினிமா என சுற்றியதில்லை. சங்கீதம்தான் இவர்களை இணைத்தது .புனிதமான காதல் என சொல்வார்களே அது இவர்களுக்குப் பொருந்தும்.
கணவரைப் பற்றி மனைவி என்ன சொல்கிறார்?
“அவர் கடவுள் இயற்றிய பாடல்.அதில் நான், எனது 3 பிள்ளைகளும் ஸ்ருதி ,ரிதம் மாதிரி அந்த பாடலில் இணைந்து இருக்கிறோம்.
அவர் அடிக்கடி சொல்வார் “நீ என்னுடைய இரண்டாவது மனைவி. முதல் மனைவி சங்கீதம். அதற்கு பிறகுதான் நீயும் பிள்ளைகளும் “என்பார்.
அவரது முதல் மனைவியை நாங்களும் விரும்புகிறோம்.இதுதான் எங்களில் குடும்ப ரகசியம்..”என்கிறார்
“அவரது வாழ்க்கையுடன் இணைந்த போது எனக்கு வயது 18 .
திருமணத்துக்கு முன்னரே அவரை பார்த்திருக்கிறேன்.நான் சங்கீத ரசிகை .1966 -ல் காயம்குளம் கொச்சுன்னி என்கிற படம் வெளியாகியது.அதில் பிரபல நடிகர் சத்யன் நடித்திருந்தார்.அந்த படத்தில் இவரும் நடித்திருக்கிறார். காதர் என்கிற வேடம். அந்த படத்தை நான் எனது அக்கா சசி ,உறவினர் தாமஸ் குட்டி ஆகியோருடன் சென்று பார்த்தேன்.அவரை பார்த்ததும் சிரிப்புத் தாங்கவில்லை.ஒடிசலான தேகம். அவரை நேரில் பார்க்க விரும்பினேன். அந்த சமயத்தில் திருவனந்தபுரத்தில் அவரது இசை கச்சேரி நடந்தது.
குடும்பத்துடன் போயிருந்தோம். சங்கீத ரசிகர்கள் விரும்புகிற பாடலை துண்டு சீட்டில் எழுதி கொடுத்தார்கள். என்னுடைய உறவினர் அஞ்சு ரூபா நோட்டின் வெள்ளைப் பகுதியில் பாடலை எழுதி கொடுத்தார்.
அதை வாங்கிப் பார்த்த இவர் சிரித்து கொண்டார். பிறகு “பஞ்ச வண்ண தட்ட போல வன்ன பெண்ணே ” என்று பாடியவர் அடுத்தவரியை இப்படி மாற்றி “அஞ்சு ரூபா நோட்டு கண்டேன் .நெஞ்சு தகறாருனு பெண்ணே “என்று பாடி விட்டார். இந்த சம்பவம் அவர் மீது ஈர்ப்பு அதிகமாக காரணமாக இருந்தது. அதன் பிறகு குடும்ப நிகழ்வுகளில் அடிக்கடி பார்த்து பேசிக்கொண்டோம்” என்கிறார் பிரபா ஜேசுதாஸ் .