தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் கொண்டு வருவதற்கு முன், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார் .
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,, “ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வருவதற்கு முன் இந்தத் திட்டத்தின் சாதக, பாதகங்களை மத்திய அரசு தெளிவான விளக்கங்களை விவசாயிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் தெரியப்படுத்தி, மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கி விளக்கம் கொடுக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தால் டெல்டா பகுதியில் இருக்கும் விவசாய நிலங்கள் அழிந்து போகும் என்ற ஒரு அச்சுறுத்தல் விவசாயிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் இருக்கிறது. அதனால் விவசாயிகளின் அச்சத்தைப் போக்கும் வண்ணம் விளக்கம் கொடுக்க வேண்டும்.
மேலும், எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மக்களுக்காகத்தான். அதனால் மக்கள் வரவேற்புடன் ஒரு திட்டம் வரும்பொழுது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் திட்டமாக இருக்கும். எனவே மத்திய அரசு இத்திட்டத்தில் அதிக கவனம் செலுத்தி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்”. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.