பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜோக்பானி – பிராட்நகர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியை, நேபாள பிரதமர் கே பி ஷர்மா ஒலியுடன் இணைந்து தொடங்கி வைத்தார்.
இருநாடுகள் இடையேயான முக்கிய வர்த்தக மையமாக ஜோக்பானி – பிராட்நகர், விளங்குகிறது. இந்தியா-நேபாள எல்லையில் வர்த்தகம் மற்றும் மக்கள் போக்குவரத்துக்கு வசதியாக, ஜோக்பானி – பிராட்நகரில் இந்திய உதவியுடன் 2-ஆவது ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.இருநாட்டு பிரதமர்களும் காணொலிக் காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “நேபாளத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்பிக்கைக்குரிய பங்குதாரராக இந்தியா பணியாற்றி வருகிறது”. “அண்டை நாடு முதலில்’ என்பதே எனது அரசின் முக்கிய கொள்கை.அதில்,எல்லைப்புற போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதும் முக்கிய அம்சமாகும்.
இந்தியா-நேபாளத்தை பொறுத்தவரை, மேம்பட்ட போக்குவரத்து வசதி மிகவும் முக்கியமானதாக உருவெடுத்துள்ளது. நம் இருநாடுகள் இடையேயான நட்புறவு, அண்டை நாடுகள் என்பதோடு மட்டுமின்றி, வரலாற்று ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும், கலாச்சாரம், இயற்கை, குடும்பங்கள், மொழி, வளர்ச்சி மற்றும் பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் அமைந்ததாகும்.
அனைத்து நட்பு நாடுகளுடனான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த எனது அரசு உறுதிபூண்டிருப்பதோடு, வர்த்தகம், கலாச்சாரம், கல்வி போன்ற துறைகளிலும் உறவு மேலும் மேம்படுத்தப்படும்.எல்லைப்புற சாலை, ரயில், போக்குவரத்துகளையும், நேபாளத்தில் உள்ள மின்சார பகிர்மான சேவையை மேம்படுத்தவும் இந்தியா பாடுபட்டு வருகிறது இவ்வாறு அவர் பேசினார்.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு, இந்திய அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் வீடுகளை புனரமைக்கும் திட்டத்தின் முன்னேற்றத்தையும் இருபிரதமர்களும் ஆய்வு செய்தனர்.கூர்கா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் 50,000 வீடுகள் கட்டித் தருவது என்ற இந்தியாவின் வாக்குறுதியில், இதுவரை 45,000 வீடுகளுக்கான பணி முடிவடைந்துள்ளது. இந்தியாவின் முயற்சிகளுக்காகபிரதமர் மோடிக்கு, நேபாள பிரதமர் கே பி ஷர்மா ஒலி நன்றி தெரிவித்தார்.