எமனிடமா முறையிடமுடியும்.?
விடியலை பார்க்கலாம் ,காத்மாண்டுவின் எழிலை ரசிக்கலாம் என படுத்துறங்கியவர்கள் சாவின் வலியில்லா அணைப்பில் உயிர் நீத்திருக்கிறார்கள்.
கேரளாவை சேர்ந்த 15 பேர் ஒரு குழுவாக நேபாளம் சென்றிருந்தார்கள்.
பிரவீன் என்கிற என்ஜினீயர் குழந்தைகளுடன் குடும்பமாக சென்றிருந்தார். டாமெனில் இருக்கும் எவரெஸ்ட் பனோரமா ரிசார்ட்டில் 15 பேரும் தங்கி இருக்கிறார்கள்.
பிரவீன் தனியாக தனது குடும்பத்துடன் ஒரு அறையில் தங்கி இருந்தார்.
ஊட்டி குளிரையே தாங்க முடியாது.எவரெஸ்ட்டின் அருகில் எப்படி இருந்திருக்கும்?
ஹீட்டரை போட்டுக் கொண்டு தூங்கி இருக்கிறார்கள்.
அந்த ஹீட்டர் பழுது பட்டது என்பது அவர்களுக்கு எப்படி தெரியும்.
கதகதப்பில் உறங்கிவிட்டனர்.
பழுது பட்ட ஹீட்டரில் இருந்து ஓசையின்றி வெளியேறிய ‘கார்பன் மோனாக்சைடு ‘ அவர்களின் சுவாசத்தில் கலந்து இதயத்தை செயலிழக்க வைத்து இருக்கிறது.
துடிக்கவில்லை.கதறவில்லை.அமைதியாகவே உயிர் பிரிந்திருக்கிறது.
அந்த நச்சு வாயுக்கு நிறம் இல்லை.மணம் இல்லை.ருசி இல்லை. அதனால் அவர்கள் மரணத்தின் வலி அறியவில்லை.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் துடித்துப் போய் நேபாள அரசுடன் தொடர்பு கொள்ள அந்த அரசு விசாரணை கமிஷன் அமைத்திருக்கிறது.